விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் தீர்த்தவாரி உற்சவம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா கடந்த 18-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு வாகனங்களில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
9-ம் நாள் விழாவான நேற்று மாலை 5.35 மணி அளவில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. பெரிய தேரில் கற்பக விநாயகரும், புதிய தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினர்.
கோவில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி பழனியப்ப செட்டியார் மற்றும் நச்சாந்துபட்டி குமரப்ப செட்டியார் ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். தேர் சிறிது தூரம் வந்தபோது பலத்த மழை பெய்தது. இதனால் தேர் அதே இடத்தில் நிறுத்தப்பட்டது. சற்று நேரத்தில் மழை நின்றும் தேரோட்டம் தொடங்கியது. சண்டிகேஸ்வரர் தேரை பெண்கள் மட்டுமே இழுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இதற்கிடையே சந்தனகாப்பு அலங்காரத்தில் மூலவர் கற்பகவிநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சந்தனகாப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. இரவில் யானை வாகனத்தில் விநாயகர் வீதி உலா வந்தார்.
10-ம் நாள் திருநாளான இன்று (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி என்பதால் பலவேறு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. காலையில் தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகர் எழுந்தருளி கோவில் திருக்குளத்துக்கு சென்றார். அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இரவு பஞ்சமூர்த்திகளின் புறப்பாட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.
No comments