முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு..... மு.க.ஸ்டாலினுக்கு எத்தனாவது இடம்..?
இந்தியாவில் பணக்கார முதல்வர்களும், ஏழையான முதல்வர்களும் யார் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏ.டி.ஆர்.) இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, ரூ.931 கோடிக்கும் அதிகமான சொத்துகளுடன் நாட்டின் பணக்கார முதல்வராக உள்ளார். அவருடைய பெரும்பாலான செல்வம் அவர் 1992-ஆம் ஆண்டு தொடங்கிய ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனம் மூலமாக வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்குப் பிறகு அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ.332 கோடி சொத்துகளுடன் இரண்டாவது இடத்திலும், கர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.51 கோடி சொத்துகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
அதே நேரத்தில், நாட்டின் ஏழையான முதல்வர்களின் பட்டியலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முதலிடத்தில் உள்ளார். அவரிடம் வெறும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் மட்டுமே உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரப்படி, மம்தா பானர்ஜியிடம் ரூ.69,255 ரொக்கமும், வங்கிக் கணக்கில் ரூ.13.5 லட்சமும், 9 கிராம் தங்கமும் இருந்ததாக பதிவாகியுள்ளது.
நிலம் அல்லது வீடு எதுவும் அவருடைய பெயரில் இல்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மம்தாவை தொடர்ந்து ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ரூ.55 லட்சம் சொத்துகளுடன் இரண்டாவது இடத்திலும், கேரள முதல்வர் பினராயி விஜயன் ரூ.1 கோடிக்கும் சற்று மேல் சொத்துகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவின் மொத்த 31 முதல்வர்களின் சொத்துகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. சராசரியாக ஒவ்வொரு முதல்வரின் சொத்து மதிப்பு ரூ.52.59 கோடியாக உள்ளது.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ரூ.30 கோடி சொத்துகளுடன் ஏழாவது இடத்திலும், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.8 கோடி சொத்து மதிப்புடன் 14-வது இடத்திலும் உள்ளார். மொத்தத்தில், 31 முதல்வர்களின் சொத்துக்கள் சேர்த்து ரூ.1,630 கோடியாக உள்ளதாக ஏ.டி.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments