அமைச்சரின் மருமகள், கணவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு - MAKKAL NERAM

Breaking

Saturday, August 30, 2025

அமைச்சரின் மருமகள், கணவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

 


கேரள வனத்துறை மந்திரியாக இருப்பவர் ஏ.கே.சசிந்திரன். இவரது அக்காள் மகள் ஸ்ரீ லேகா (வயது 68). அவரது கணவர் பிரேமராஜன் (76). இவர் கண்ணூரில் உள்ள பிரபல ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு பிரபித், சிபின் என 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.


இந்தநிலையில் நேற்று சிபின் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையம் வருவதாக தெரிவித்து இருந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்து அழைத்து வருவதற்காக பிரேமராஜனின் டிரைவரான சரோஷ் என்பவர், சிரைக்கல் பகுதியில் உள்ள பிரேமராஜன் வீட்டுக்கு கார் எடுக்க வந்தார். வீட்டின் கதவை பலமுறை தட்டியும், கதவு திறக்கப்பட வில்லை. பின்னர் அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.


அப்போது ஒரு அறையில் ஸ்ரீலேகா தலையில் அடிபட்டு உடல் கருகி இறந்து கிடந்தார். அருகே பிரேமராஜன் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த கண்ணூர் மாநகர போலீஸ் கமிஷனர் நிதின்ராஜ் தலைமையில் வளப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.


பின்னர் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கண்ணூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீலேகாவை பிரேமராஜன் அடித்து கொன்று விட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார், இயற்கை அல்லாத மரணம் என வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment