குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு..... சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..... - MAKKAL NERAM

Breaking

Saturday, August 16, 2025

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு..... சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.....

 




தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.


நேற்று காலை குற்றாலம் சுற்றுவட்டார மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


காலை 10 மணி வரை மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் அபாய எச்சரிக்கையை ஒலிக்கச் செய்து சுற்றுலா பயணிகள் அனைவரையும் அருவி கரையில் இருந்து அப்புறப்படுத்தினர்.


இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் அப்புறப்படுத்தப்பட்ட சிறிது நேரத்தில் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.


அதேபோல் ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளிலும் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கும் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.


நேற்று சுதந்திர தினம் என்பதால் விடுமுறையை கொண்டாடுவதற்காக வெளியூரிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும் புலியருவி, சிற்றருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் அங்கு சென்று குளித்து மகிழ்ந்தனர்.குற்றாலம், புளியரை, செங்கோட்டை, வல்லம், இளஞ்சி, ஆயிரப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை மிதமான மழை பெய்தது. தென்காசியில் பரவலாக மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.


இன்றும், நாளையும் தொடர் விடுமுறை என்பதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறையும் பட்சத்தில் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் குற்றாலம் பிரதான அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment