சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை..... விமான சேவைகள் பாதிப்பு..... பயணிகள் அவதி - MAKKAL NERAM

Breaking

Sunday, August 31, 2025

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை..... விமான சேவைகள் பாதிப்பு..... பயணிகள் அவதி

 

FILE IMAGE

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (31-08-2025) மற்றும் நாளை (1-09-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.


இந்த சூழலில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு கனமழை கொட்டித் தீர்த்தது. சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், வடபழனி, கிண்டி, ஆலந்தூர், கோடம்பாக்கம், போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது. அண்ணா நகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது.


சென்னை மீனம்பாக்கம், வண்டலூர், தாம்பரம், சேலையூர் பகுதிகளிலும் கனமழை கொட்டியது. வட சென்னை பகுதிகளான ராயபுரம், வண்ணரப்பேட்டை, தண்டையார்பேட்டையில் கனமழை வெளுத்து வாங்கியது. வியாசர்பாடி பகுதியில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக மணலியில் 27 செ.மீ, விம்கோநகரில் 23 செ.மீ, கொரட்டூரில் 18 செ.மீ, கத்திவாக்கத்தில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


இந்த நிலையில், சென்னையில் நள்ளிரவு பெய்த கனமழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கோலாம்பூர், மஸ்கட், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல இருந்த 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. அதைபோல வெளிநாடு மற்றும் வெளியூரிகளில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 12 விமானங்கள் தாமதமாக வந்தடைந்தன.


ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ், ஹைதராபாத், மங்களூர், டெல்லியில் இருந்து சென்னை வந்த 4 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த நிலையில், பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன. 8 விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து தாமதமாக தரையிறங்கின. விமான சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

No comments:

Post a Comment