சின்னம்பேடு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் உள்ளது.ராமாயண காலத்தின் கோவில் என்றும்,சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் என்றும்,லவன்-குசன் போரிட்ட தலம் என்றும், அருணகிரிநாதரால் பாடற்பெற்றது என்றும், இத்திருகோவிலில் வரதராஜ பெருமாள் மேற்கு திசை நோக்கியும்,சீனிவாச பெருமாள் கிழக்கு திசை நோக்கியும்,லட்சுமி நாராயண பெருமாள் தெற்கு திசை நோக்கியும் மூன்று மூர்த்திகள் உள்ளது சிறப்பு ஆகும்.மேலும், தீண்டா திருமேனி என்று கூறப்படும் மூலவருக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தைல காப்பு மட்டுமே செய்யப்படுகிறது.
அபிஷேகம் என்பது கிடையாது.இவ்வாறு சிறப்புகளைப் பெற்ற இத்திரு கோவிலுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்னர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், இத்திருக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவஞானம், செயல் அலுவலர் மாதவன் ஆகியோர் தலைமையில் கிராம பொதுமக்கள் ஐந்து நிலை கோபுரங்களை அமைத்து ஸ்தபதி நடராஜன் கைவண்ணத்தில் திருக்கோவிலை புனரமைத்தனர். இத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த புதன்கிழமை முதல் பகவத் பிரார்த்தனை,புன்யாவஜனம், அக்கினி பிரதிஷ்டை,வாஸ்து சாந்தி,பரிவார கலச ஸ்தாபனம் உள்ளிட்டவை நடைபெற்றது.இன்று காலை மகாபூர்ணாகுதி,யாத்ரா தானம்,மகாதீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர்,மங்கள வாத்தியம் முழங்க,புனித நீர் அடங்கிய கலசங்கள் பிரகார புறப்பாடு நடைபெற்றது. காலை 9 மணிக்கு விமான கோபுரம்,ராஜகோபுரம், மூலவர்,பிரகார மூர்த்திகள் உள்ளிட்டவைகளுக்கு பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.இதன் பின்னர்,பக்தர்களுக்கு தீர்த்தம்,பிரசாதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
திருக்கோவில் வளாகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவஞானம், செயல் அலுவலர் மாதவன் ஆகியோர் தலைமையில் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் சோழவரம் ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்தகுமார் அவைத் தலைவர் சிறுவாபுரி ரமேஷ் பிரபு மனோஜ் கதிரவன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று மாலை திருக்கோவில் வளாகத்தில் சுவாமிக்கு திருக்கல்யாணமும்,அதனைத் தொடர்ந்து பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட சுவாமி மங்கள வாத்தியம் முழங்க, வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.நாளை முதல் 48 நாட்கள் மண்டலாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
No comments