திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து ஆலாடு, ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி, காட்டூர் வழியே மீஞ்சூர் செல்லும் விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பேருந்து தடம் எண் 140 இன்று காலை வழக்கம்போல மீஞ்சூர் சென்று விட்டு மீண்டும் பொன்னேரிக்கு திரும்ப வந்து கொண்டிருந்தது.
நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் விடிய விடிய மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பெரிதும் அவதியுற்றனர். இந்த நிலையில் அரசுப் பேருந்து காட்டூரில் இருந்து தத்தைமஞ்சி நோக்கி வந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஏரிக்கரை தடுப்புச் சுவற்றில் மோதியது.
இதில் பேருந்தின் ஒருபக்க சக்கரம் கீழே இறங்கி பேருந்து அந்தரத்தில் நின்றது. இதையடுத்து பேருந்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள், ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்டோர் அலறி அடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் விழுப்புரம் கோட்ட போக்குவரத்து பொன்னேரி பணிமனை அதிகாரிகள் விரைந்து வந்து அந்தரத்தில் தொங்கும் பேருந்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக பேருந்தின் முன் சக்கரம் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment