திருவண்ணாமலையை சேர்ந்தவர் ராஜா (45 வயது). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். ராஜா, சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் குமரன் நகர், நேரு தெருவில் ஒரு வருடமாக குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் தங்கி, ஓட்டலில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மாமனார் அழகர்சாமி (55 வயது). தேனி மாவட்டம், கல்லுப்பட்டி, வள்ளியம்மை தெருவில் வசித்து வந்தார். இவர், ஊரில் உள்ள சொத்துகளில் ராஜா குடும்பத்துக்கு பங்கு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பொழிச்சலூரில் உள்ள மகள் வீட்டுக்கு வந்த அழகர்சாமியிடம், சொத்து தொடர்பாக ராஜா தகராறு செய்தார். மாமனார்-மருமகன் இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ராஜா, வீட்டின் வெளியே இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து மாமனார் அழகர்சாமியின் தலையில் பலமாக தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த அழகர்சாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த சங்கர் நகர் போலீசார் கொலையான அழகர்சாமி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment