• Breaking News

    ராமநாதபுரம் மாவட்டமும்..... ஹைட்ரோ கார்பன் திட்டமும்..... ஓர் பார்வை.....


    ராமநாதபுரத்தில் 20 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் மாநிலத்தில் எங்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


    இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் எடுக்க ராமநாதபுரம் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்:-


    ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம், ராமநாதபுரம் மற்றும் சிவங்கை மாவட்டத்தை தேர்வு செய்ததில் சில புவியியல் தகவல்கள் மறைந்து இருக்கிறது. அதாவது இந்த 2 மாவட்டங்களும் காவிரி துணை படுகையின் கீழ் வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த மாவட்டங்களில் தான் காவிரி ஆறு பாயவில்லை? அப்புறம் எப்படி காவிரி துணை படுகை என்று கேட்க தோன்றுகிறதா?.


    கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் காவிரி ஆறு கொண்டு வந்து குவிந்த மணல், சிதிலக்கற்கள், கடல் சேர்க்கைகள் கிழக்கு கடற்கரை முழுவதும் பூமிக்கடியில் பரந்து விரிந்து கிடக்கிறது. எனவே அங்கு அதிகளவில் ஹைட்ரோ கார்பன்கள் இருக்கும். எனவேதான் காவிரி பாயும் பகுதிகள் தவிர, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களும் காவிரி துணை படுகையின் கீழ் வருவதாக புவியியல் கணக்கில் வரையறுக்கப்பட்டுள்ளன.


    தற்போது பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள் இல்லாததால் அந்த மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தோண்டப்படும் இந்த 20 கிணறுகள் மூலம் தினமும் 38 ஆயிரத்து 900 டன் ஹைட்ரோ கார்பன் எடுக்க முடியும் என ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. அதன் மூலம் 60 சதவீத எண்ணெயும், 60 சதவீத எரிவாயும் பிரித்தால் தினந்தோறும் 2.73 கோடி லிட்டர் கச்சா எண்ணெயும், 15,520 டன் எரிவாயும் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.


    ஹைட்ரோ கார்பன் என்பது கார்பன் மற்றும் ஹைட்ரஜன் சேர்ந்து உருவான இயற்கை எரிபொருள். இதுதான் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றின் அடிப்படை மூலப்பொருள். அதாவது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடல், ஏரி, ஆறு போன்ற இடங்களில் இருந்த தாவரங்கள், உயிரினங்கள் சிதைந்து மண், பாறைகளின் அடியில் புதைந்து போய் விட்டன. அது காலமாற்றத்தால் அதிக அழுத்தம் மற்றும் அதிக வெப்பம் காரணமாக அவை ஹைட்ரோ கார்பனாக மாறி விடும்.


    இந்த ஹைட்ரோ கார்பனை கண்டறிய பூமிக்குள் ராட்சத துளையிடும் கருவி மூலம் 3 ஆயிரம் மீட்டர் ஆழம் வரை தோண்டப்படும். அப்போது மண் விழுந்து கொண்டே செல்லாமல் இருக்க ஸ்டீல் குழாய்கள் பொருத்தப்படும். அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், கிணற்றை நிலைநிறுத்தவும் ‘டிரில்லிங் மட்' எனப்படும் ரசாயன கலவைகள் பயன்படுத்தப்படும்.


    ஹைட்ரோ கார்பனுக்காக ஒரு கிணறு தோண்டினால், அந்த பகுதியை சுற்றி 3 கிலோ மீட்டர் தூரம் வரை நிலத்தடி நீர் பாதிக்கப்படும். 5 கிலோ மீட்டர் தூரம் வரை காற்று மாசு ஏற்படும். 3 கி.மீட்டர் வரை சத்தம் அதிகமாக இருக்கும். சுருக்கமாக சொன்னால், சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மைக்கு இது பெரிய பாதிப்பு தான். எனவே தான் இந்த திட்டத்துக்கு விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.


    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட 20 இடங்கள் பற்றிய விவரம்:-


    தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், வேப்பங்குளம், பூக்குளம், சடையனேரி, கீழசிறுபோது, வல்லக்குளம், பனையடியேந்தல், கடம்போடை, நல்லிருக்கை, அரியக்குடி, காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், அலமலந்தல், சீனாங்குடி, அழகர்தேவன் கோட்டை (2 இடங்கள்), ஏ.மானக்குடி.

    No comments