• Breaking News

    விலகிய டிரீம் 11..... ஆசிய கோப்பையில் ஸ்பான்சர் இல்லாத ஜெர்சியில் களமிறங்கும் இந்தியா

     


    பணம் செலுத்தி விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையில் இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்கு முறை சட்ட மசோதாவை மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் விளம்பரதாரராக இருந்த ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான ‘டிரீம் 11’ அந்தப் பொறுப்பில் இருந்து விலகியது.


    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முதன்மை ஸ்பான்சராக டிரீம்11 இருந்து வந்தது. செல்போன் செயலி மூலம் விளையாடப்பட்ட இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் குறிப்பிட்ட கிரிக்கெட் ஆட்டம் நடக்கும்போது, இரு அணிகளையும் சேர்த்து சிறப்பாக செயல்படும் 11 வீரர்களை அடையாளம் கண்டு, அதில் அதிக புள்ளிகளுக்குரியவர்களை கேப்டன், துணை கேப்டனாக சரியாக தேர்வு செய்து இருந்தால் கோடிக்கணக்கில் பரிசு கிடைக்கும். ஆனால் பந்தயத்தில் சேருவதற்கு ரூ.49, ரூ.39 இப்படி பல்வேறு பிரிவில் பணம் கட்ட வேண்டும். இதன் மூலம் டிரீம்11-க்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டியது.


    2023 முதல் 2026-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்கு ரூ.358 கோடி ஸ்பான்சர்ஷிப்பாக வழங்க டிரீம்11 இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. டிரீம்11 மற்றும் மற்றொரு ஆன்லைன் ஸ்போர்ட்ஸ் கம்பெனியான மை11 சர்க்கிள் ஆகியவை இந்திய அணிகளுக்கும் (ஆண்கள், பெண்கள், ஜூனியர்), ஐ.பி.எல். போட்டிக்கும் ஸ்பான்சர் அளித்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரிய வருவாயில் அவற்றின் பங்களிப்பு சுமார் ரூ.1000 கோடியாக இருந்தது. இந்த வருமானத்தை கிரிக்கெட் வாரியம் இழக்கிறது.


    இந்த சூழலில் அந்த நிறுவனம் முன்னதாகவே விலகியதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) புதிய ஸ்பான்சரை தேடுகிறது. புதிய ஸ்பான்சரை பி.சி. சி.ஐ. ரூ.450 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025 முதல் 2028 வரை இந்திய புதிய ஸ்பான்சர்ஷிப்புக்கான ஒப்பந்தம் இருக்கும். டிரீம் 11 வழங்கிய தொகையை விட அதிகமான தொகையை பெற கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. அதோடு இருதரப்பு போட்டிக்கு ரூ.3½ கோடியும், ஐ.சி.சி. மற்றும் ஆசிய போட்டிகளுக்கு ரூ.1.5 கோடியும் இலக்காக பி.சி.சி.ஐ. நிர்ணயித்துள்ளது.


    இதனிடையே ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி தொடங்க உள்ளது. அதற்குள் புதிய ஸ்பான்சர் நிறுவனம் கிடைப்பது கடினம். எனவே அந்த தொடரில் ஸ்பான்சர் இல்லாத ஜெர்சி அணிந்து இந்திய வீரர்கள் விளையாடுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    No comments