• Breaking News

    ஸ்ரீரங்கம் கோவிலில் முதியவரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் சஸ்பெண்ட்

     


    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (புதன்கிழமை) திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி ஸ்ரீரங்கத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் வழிநெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும், ஸ்ரீரங்கம் கோவில் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


    இந்த நிலையில் ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு அம்சமாக, அங்கு தங்கியுள்ள பிச்சைக்காரர்களை வெளியேற்ற போலீசார் நேற்று முயற்சித்தனர். அப்போது, ஈரோட்டை சேர்ந்த 65 வயதுடைய முதியவர் ஒருவர் வெளியேற மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் 2 போலீசார் அவரை அடித்து உதைத்து தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.


    இதையடுத்து பிச்சைக்காரர்களை கட்டாயமாக வெளியேற்றும் முயற்சியை போலீசார் கைவிட்டனர். மாறாக, அவர்களாகவே கோவிலில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினர். தாக்கப்பட்ட முதியவர் கடந்த ஓராண்டாக ஸ்ரீரங்கம் கோவிலில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.


    இதற்கிடையே பிச்சைக்காரர் தாக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, இந்த தாக்குதலில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசாரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    No comments