காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சமூக ஊடக பிரிவினர் பிரதமர் மோடி சேலை கட்டியிருப்பது போன்ற பதிவு ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
இதற்கு பரவலாக கண்டனம் எழுந்தது. பா.ஜ.க.வினர் கொந்தளித்தனர். அவர்களில் சிலர் அந்த காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக ஊழியரான பிரகாஷ் பகாரே (வயது 73) என்பவரை பிடித்து வைத்து கொண்டனர்.
ஒருவர் அந்த காங்கிரஸ் நபருக்கு சேலையை எடுத்து கட்டி விட்டார். அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும், கட்டாயப்படுத்தி சேலையை உடலில் சுற்றி விட்டனர். பின்னர் புகைப்படமும் எடுத்து கொண்டனர். இதுபற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பொதுவாக, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் காரசாரத்துடன் விவாதத்தில் ஈடுபடுவதும், சமூக ஊடகங்களில் விமர்சனங்களை வெளியிடுவதும் நடைபெறும்.
இந்நிலையில், சமீப நாட்களாக பிரதமரை அவமதிக்கும் வகையில், எதிர்க்கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். அவருடைய தாயாரை அவமதிக்கும் வகையில் ஊடகங்களில் வெளியான வீடியோவுக்கு பா.ஜ.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அது அக்கட்சியினரால் போலியாக உருவாக்கப்பட்ட வீடியோ என எதிர்தரப்பினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி சேலை கட்டியிருப்பது போன்ற பதிவு வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாமா என அழைக்கப்படும் பகாரேவுக்கு பா.ஜ.க.வினரால் சேலை கட்டி விடப்பட்டது. இதுபற்றி கல்யாண் மாவட்ட பா.ஜ.க. தலைவர் நந்து பராப் கூறும்போது, நம்முடைய பிரதமரின் அருவருக்கத்தக்க படம் ஒன்றை வெளியிடுவது குற்றத்திற்குரிய ஒன்று மட்டுமின்றி ஏற்று கொள்ள முடியாததும் ஆகும்.நம்முடைய தலைவர்களை அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற முயற்சிகள் மேற்கொண்டால், அதற்கு பா.ஜ.க. கடுமையான பதிலடி கொடுக்கும் என எச்சரித்து உள்ளார்.
0 Comments