எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் ஒரு மணி நேரம் ஆலோசனை
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அவருடன் தமிழ்நாடு பாஜக மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனனும் உடனிருந்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-
மரியாதை நிமித்தமாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினேன். டெல்லியில் அமித்ஷாவுடன் பழனிசாமி பேசியது குறித்து ஆலோசிக்கவில்லை. அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை. அதிமுக ஒன்றிணைப்பு குறித்து காலம்தான் பதில் சொல்லும். ராசிபுரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய கூட்டத்தில் 30,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். மக்கள் எழுச்சி எங்கள் கூட்டணி பக்கம்தான் இருக்கிறது.
விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்துள்ளார். கூட்டம் வருவதை வைத்து திமுக-தவெக இடையேதான் போட்டி என்று சொல்லக்கூடாது. தேர்தல் வர வேண்டும். நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். மக்கள் ஓட்டு போட வேண்டும்; அதற்கு பிறகுதான் சொல்ல முடியுமே தவிர ஜோசியம் எல்லாம் சொல்ல முடியாது. திடீர்னு வந்து திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என சொன்னால் எப்படி?. விஜய்க்கு கூடும் கூட்டம் எல்லாம் வாக்காக மாறாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பாமக உட்கட்சி பிரச்னை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “எந்த உட்கட்சி பிரச்னையிலும் பாஜக தலையிடாது” என்று தெரிவித்தார்.
No comments