• Breaking News

    தீபாவளி பரிசு...... வீட்டு உபயோகப்பொருட்களின் வரியை குறைத்த மத்திய அரசு......

     


    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி மந்திரிகளும் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். ஜி.எஸ்.டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைப்பது பற்றியும், வரிகுறைப்பு பற்றியும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.


    முன்னதாக இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. கலால் வரி, வாட், சேவை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஜி.எஸ்.டி. என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டன.


    நாட்டின் மறைமுக வரி அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த இந்த ஜி.எஸ்.டி. 4 அடுக்குகளை கொண்டிருந்தது. அதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 வகையான வரி விகிதத்தின் கீழ் அனைத்துப்பொருட்கள் மற்றும் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த ஜி.எஸ்.டி. விகிதங்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

    இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த மாதம் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது செங்கோட்டையில் ஆற்றிய உரையில் இதை அறிவித்தார். இது மக்களுக்கு தீபாவளி பரிசாக அமையும் என்றும் அவர் கூறினார். பிரதமர் அறிவிப்பை தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி விகிதக்குறைப்பை நிதியமைச்சகம் வெளியிட்டது. இதை அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் எனவும், ஜி.எஸ்.டி 2.0 எனவும் அறிவித்தது.


    அதன்படி 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைக்கப்படுகிறது. வெறும் 5 மற்றும் 18 சதவீத அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வகையில் வரி விகிதம் மாற்றப்பட்டு உள்ளன. அதேநேரம் சிகரெட் மற்றும் புகையிலை, பான் மசாலா போன்ற பாவப்பொருட்கள் மற்றும் சொகுசு கார் போன்ற உயர் ரக ஆடம்பர பொருட்கள், குளிர் பானங்கள் ஆகியவற்றுக்காக 40 சதவீத சிறப்பு வரி அடுக்கும் அறிமுகம் செய்யப்படுகிறது.


    இந்த வரி குறைப்பு மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை கணிசமாக குறையும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மக்களின் வாழ்க்கை செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைப்போல ஜவுளி, உரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கைவினைப்பொருட்கள், வாகனங்கள், வேளாண்மை, சுகாதாரம் மற்றும் இன்சூரன்ஸ் ஆகிய துறைகள் உத்வேகம் பெறும் நிலையும் உருவாகி இருக்கிறது.


    உள்நாட்டில் மக்கள் பொருட்களை வாங்கும் திறன் அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்து உள்ளது. மேலும் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்து இருக்கும் நிலையில், நாட்டின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை பாதிப்பில் இருந்து மீளவும் இது உதவும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


    மத்திய அரசின் இந்த ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் தொடர்பான பரிந்துரையை கடந்த மாதம் ஜி.எஸ்.டி. மாநில மந்திரிகள் குழு விவாதித்து ஏற்றுக்கொண்டது. அத்துடன் ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கும் பரிந்துரைகளை அனுப்பியது. அதைத்தொடர்ந்து இந்த சீர்திருத்தம் குறித்து முடிவு எடுப்பதற்காக, ஜி.எஸ்.டி. தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பான ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று கூடியது.


    இதில் பேசிய நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. சீர்திருத்த திட்டத்தை, அதாவது 4 அடுக்கு வரி விகிதம் 2 அடுக்கு வரி விகிதமாக மாற்றப்படுவதை வெளியிட்டார். இது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சிலில் விவாதம் நடந்தது. 10 மணி நேரத்துக்கு மேலாக நீண்ட இந்த விவாதம் இரவில் நிறைவடைந்தது. இதில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம், அதாவது 2 அடுக்காக குறைக்கப்படும் ஜி.எஸ்.டி.2.0 கவுன்சில் கூட்டத்தில் ஒருமனதாக ஏற்கப்பட்டது.


    இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், “ஆகஸ்ட் 15-ம் தேதி செங்கோட்டையில் இருந்து பேசிய பிரதமர் மோடி, அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கான தொனியை வகுத்தார். தீபாவளிக்குள், விரைவில் அதற்கான பலனை வழங்க அவர் முடிவு செய்தார்.


    இதன்படி ஜி.எஸ்.டி. வரி அடுக்குகளைக் குறைத்துள்ளோம். இனிமேல் 5 மற்றும் 18 சதவீதம் என 2 அடுக்குகள் மட்டுமே இருக்கும். மேலும் இழப்பீட்டு வரி தொடர்பான பிரச்சினைகளையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். சாதாரண மக்களை மையமாக வைத்து இந்த சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களது அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் மீதான ஒவ்வொரு வரியும் கடுமையான மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண மனிதர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பயன்பாட்டு பொருட்களில், முழுமையான குறைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டி. குறைப்பு வருகிற 22-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது” என்று அவர் கூறினார்.








    No comments