விண்வெளியில் நடப்பாண்டு நிலவரப்படி தொடர்புகள், பூமி கண்காணிப்பு, தொழில்நுட்ப மேம்பாடு, வழிசெலுத்துதல் மற்றும் விண்வெளி அறிவியல் ஆகிய 5 முதன்மை பணிகளுக்காக பூமி சுற்றுப்பாதையில் 105 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்து 149 செயற்கைக்கோள்கள் இருப்பது பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா, ரஷியா, சீனா, ஐக்கிய நாடுகள், ஜப்பான், பிரான்ஸ், இந்தியா, ஜெர்மனி, கனடா மற்றும் இத்தாலி ஆகிய 10 நாடுகள் அதிக செயல்பாட்டு செயற்கைக்கோள்களைக் கொண்ட நாடுகளாகும்.
இவற்றை ஆழமாக ஆராய்ந்தால் பூமியிலிருந்து 500 முதல் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பூமி சுற்றுப்பாதையில் சிறிய செயற்கைக்கோள்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளன. இவை புதுமையான புதிய விண்வெளி பயன்பாடுகளுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பூமி கண்காணிப்பு, தகவல் தொடர்பு, அறிவியல் ஆய்வு, வானிலை கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தற்போது நம் நாட்டுக்கு சொந்தமான 56 செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த நிலையில், கடந்த ஆண்டில் அண்டை நாட்டுக்கு சொந்தமான செயற்கைக்கோள், 1 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியாவின் செயற்கைக்கோள் மீது மோதுவது போல் சென்றது. அதிர்ஷ்டவசமாக ஒன்றும் ஆகவில்லை. இதன் காரணமாக, விண்வெளியில் உள்ள இந்தியாவின் செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் திட்டம் ஒன்றை இந்திய அரசு உருவாக்கி வருகிறது.
இந்த திட்டத்தின்படி, 50 மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்களை உருவாக்கி பூமி சுற்றுப்பாதையில் சுற்றி வரும் செயற்கைகோள்களை பாதுகாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.அடுத்த ஆண்டு (2026) முதல் மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதனை துரிதப்படுத்த ‘ஸ்டார்ட்-அப்' நிறுவனங்களுடன் இணைந்து இஸ்ரோ பணியாற்றி வருகிறது. நிகழ்நேர அச்சுறுத்தலை கண்டறிதல் மற்றும் விரைவான பதில் திறன்களை வழங்க, இந்த மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள் இந்தியாவின் முக்கிய செயற்கைக்கோள்களுடன் சுற்றுப்பாதையில் இயங்கும்.
அதிநவீன சென்சார்கள் பொருத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள், சிக்னல் ஜாம்மிங், சைபர் தாக்குதல்கள், எதிரி செயற்கைக்கோள்களின் குறுக்கீடு போன்ற அபாயங்களை எதிர்கொள்வதை நோக்கமாக கொண்டுள்ளது. தொலை உணர்திறன் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளி கண்டறிதல் மற்றும் வரம்பைக் குறிக்கும் ‘ரேஞ்சிங்' அமைப்புகள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும். இந்த லேசர் அடிப்படையிலான சென்சார்கள் அருகிலுள்ள சுற்றுப்பாதை பொருட்களின் துல்லியமான 3டி வரைபடங்களை உருவாக்கும். இது வழக்கமான ரேடாருடன் ஒப்பிடும்போது வேகமான மற்றும் துல்லியமான அச்சுறுத்தல் கண்டறிதலை செயல்படுத்தும். மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
0 Comments