• Breaking News

    பாமக உறுப்பினர் படிவம், அடையாள அட்டைகளில் அன்புமணியின் புகைப்படம் நீக்கம்

     


    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தீவிரமாகி உள்ளது. டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்காததால் அவர் மீதான நடவடிக்கையை டாக்டர் ராமதாஸ் நாளை(வியாழக்கிழமை) எடுப்பார் என்று கட்சியினர் கூறி வருகிறார்கள்.


    இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீகாந்தி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், பேராசிரியர் தீரன் உள்பட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


    கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்துள்ள அறிக்கை குறித்தும், தொடர்ந்து கட்சிக்கும், நிறுவனர், தலைவரான டாக்டர் ராமதாசுக்கும் எதிராக செயல்பட்டு வரும் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது, 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டம் முடிந்து வெளியே வந்த, புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி நிருபர்களிடம் கூறுகையில், 2026 தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளையும், தேர்தல் பணியை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் எங்களிடம் தெரிவித்தார் என்றார்.


    இதனிடையே தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க.வின் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் உறுப்பினர் படிவம் அச்சிடப்பட்டு அங்கு வைக்கப்பட்டு இருந்தது. அதில் டாக்டர் அன்புமணி ராமதாசின் புகைப்படம், பெயர் இடம்பெறவில்லை. இதற்கு முன்பு டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாசின் புகைப்படங்களுடன் பெயர் இடம் பெற்று இருக்கும். ஆனால் தற்போது டாக்டர் ராமதாஸ் படம் மற்றும் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


    டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது எந்த மாதிரியான நடவடிக்கையை டாக்டர் ராமதாஸ் எடுக்க உள்ளார் என்று பலரும் எதிர்நோக்கி இருக்கிறார்கள். இந்த சூழலில் உறுப்பினர் படிவம் மற்றும் அடையாள அட்டைகளில் அவரது படம் நீக்கம் செய்யப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    No comments