• Breaking News

    திருச்சியில் தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

     


    சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய் மக்கள் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்கள் சந்திப்பு பிரசாரத்திற்காக நவீன ரக பஸ்சை விஜய் பயன்படுத்த உள்ளார். இந்த பஸ்சில் தொண்டர்கள் யாரும் ஏறி விடாதபடி இரும்பு வேலிகள் பஸ்சின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. நவீன கேமராக்கள், ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் மக்கள் சந்திப்புக்காக விமானம் மூலம் விஜய் திருச்சி வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தேர்தல் பிரசார பயணத்தை விஜய் திருச்சியில் இருந்து தொடங்கி உள்ளார்.இந்நிலையில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை வாகனம் திருச்சி விமான நிலையத்தைவிட்டு நகர முடியாத அளவுக்கு தொண்டர்கள் சூழ்ந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.  

    இந்த பிரசாரம் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று விஜய்யின் ரசிகர்கள், த.வெ.க. தொண்டர்கள் நம்புகிறார்கள்.

    முன்னதாக விஜய்யின் பிரசார வாகனம் பனையூரில் இருந்து நேற்று மாலை திருச்சியை நோக்கி புறப்பட்டது. இதற்கிடையே, மக்கள் சந்திப்பையொட்டி இலச்சினை (லோகோ) ஒன்றை த.வெ.க. வெளியிட்டிருந்தது. இந்த லோகோவில், உங்க விஜய் நான் வரேன், வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.முன்னதாக விஜய்யின் பிரசார பயணத்துக்கு 25 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்திருந்தனர். அதன்படி அரியலூர் உட்கோட்ட எல்லைக்குள் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டே நடந்து கொள்ள வேண்டும். பரப்புரைக்கு வரும் கட்சியினர் அனைவரும் காலை 11.25 மணிக்குள் பரப்புரை நடக்கும் இடமான அரியலூர் பழைய பஸ் நிலைய பகுதிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். 

    தங்களது தலைவர் திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக கீழப்பழுவூர் புறவழிச்சாலையில் இருந்து கீழப்பழுவூர் திடீர் குப்பம், வாரணவாசி, தவுத்தாய்குளம், அரியலூர் கலெக்டர் அலுவலக ரவுண்டானா வழியாக அரியலூர் பழைய பஸ் நிலையத்திற்கு வரும்போது சாலை வலம் (ரோடு ஷோ) நடத்தக் கூடாது. மேலும் எந்தப்பகுதியிலும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தக்கூடாது. பரப்புரை வழித்தடத்தினில் தங்கள் தலைவரின் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படாது. பொதுமக்கள் பரப்புரையை சிரமமின்றி பார்க்கும் வகையில் தடுப்பு அரண்களை தாங்களே அமைத்து தர வேண்டும். இதுபோன்ற நிபந்தனைகளில் எவையேனும் மீறப்படும் பட்சத்தில் பரப்புரையை இடையிலேயே நிறுந்துவதற்கு காவல்துறையினருக்கு முழு அதிகாரம் உள்ளது என்பது உள்பட 25 நிபந்தனைகளை விதித்து போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.

    No comments