• Breaking News

    சிவகங்கை: வைகை ஆற்றில் கிடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்கள்..... அரசு ஊழியர் கைது

     



    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதி கிராமங்களில் சில வாரங்களுக்கு முன்பு `உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடந்தன. இந்த முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள், கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

    கடந்த மாதம் 29-ந்தேதி, திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்பட்ட பல மனுக்கள் தண்ணீரில் மிதந்தன. இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதைதொடர்ந்து அப்போதைய தாசில்தார் விஜயகுமார், திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், கடந்த மாதம் 25, 26-ந்தேதிகளில் நடந்த முகாம்களில் 13 பட்டா மாறுதல் மனுக்கள் பெறப்பட்டு எனது பார்வைக்கு வந்தன. பின்னர் அந்த மனுக்கள் ஏற்கப்பட்டு நில அளவை பிரிவில் நிலுவையில் இருந்தன. அந்த மனுக்களை திருடிச்சென்று திருப்புவனம் வைகை ஆற்றில் வீசிவிட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.பின்னர் இந்த விவகாரத்தில் அந்த தாசில்தார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மனுக்களை பாதுகாக்க தவறியதாக சில ஊழியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கூடுதல் சூப்பிரண்டு பிரான்சிஸ், மானாமதுரை துணை சூப்பிரண்டு பார்த்திபன் மேற்பார்வையில், திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா ஆகிேயார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்தனர்.

    கண்காணிப்பு கேமரா பதிவுகளை தொடர்ந்து ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் உதவி வரைவாளராக பணியாற்றிய முத்துக்குமரன் (வயது 42) என்பவரை கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரிடம் தீவிரமாக விசாரணை நடந்தது. வைகையில் மனுக்கள் வீசப்பட்டதில் வேறு யார், யாருக்கு தொடர்பு உள்ளது, யாருடைய தூண்டலின்பேரில் இவ்வாறு மனுக்கள் வீசப்பட்டன? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    No comments