• Breaking News

    பிரதமர் மோடி ஆட்சி அமைந்த பிறகு நாட்டில் வன்முறை குறைந்துள்ளது...... ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

     


    சென்னை ஐ.ஐ.டி. மற்றும் ‘திங்க் இந்தியா' மாணவர் அமைப்பின் சார்பில், சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் ‘தக்சின் பதா மாநாடு' 2 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். ‘தேச மறுமலர்ச்சிக்கான தொழில்முனைவு மற்றும் செயற்கை நுண்ணறிவு' என்ற தலைப்பில், இளம் சிந்தனையாளர்கள், தொழில்முனைவோர்கள், செயற்கை நுண்ணறிவு வல்லுனர்கள் விவாதிக்கின்றனர்.

    இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மிகவும் அமைதியான மாநிலங்களாக இருந்தன. ஆனால், சுதந்திரம் பெற்ற 10 ஆண்டுகளில் அங்கு வன்முறை வெடித்தது. மொழி, இன பிரச்சினைகள் உருவாகின. 1947-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இந்தியாவில் வன்முறை இருந்தது. 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் மக்கள் வரையில் ஒவ்வொரு ஆண்டும் வன்முறையால் இறந்தார்கள்.

    அதேபோல், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. தற்போது, பெரும் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், தொடர்ந்து பிரச்சினைகள் நீடிக்கின்றன. 1960-களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம் காணப்பட்டது. 2014-ம் ஆண்டு தேசத்தை நேசிக்கும் தலைமை உருவான பிறகு (அதாவது பிரதமர் மோடி ஆட்சி அமைந்த பிறகு) நாட்டில் வன்முறை குறைந்துள்ளது.

    சுதந்திரத்தின்போது இந்தியா 6-வது பொருளாதாரமிக்க நாடாக இருந்தது. அதுவே கடந்த 2014-ம் ஆண்டில் 11-வது இடத்துக்கு பின்தங்கியது. 2014-க்கு பிறகு, புதிய இந்தியா பிறந்தது. 2014-ல் வறுமை கோட்டிற்கு கீழ் 30 சதவீதம் மக்கள் இருந்தனர். அந்த எண்ணிக்கை, தற்போது 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    கடந்த 11 ஆண்டுகளில், 25 கோடி மக்கள் வறுமைக்கோட்டில் இருந்து வெளிவந்துள்ளனர். இந்தியாவின் ஆன்மா ஆன்மிகம். பாரதம் ஒரு தனி நாடு கிடையாது. நம் நாட்டின் சில அமைப்புகள் மீது பலர் பொய்யான கருத்துகளை பரப்புகிறார்கள், அதை சிதைக்க முயல்கிறார்கள். எதிரிகளிடம் இருந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    நம் ராணுவம் வெளிநாட்டு ஆதாரங்களையே சார்ந்திருந்தது. இதற்காக, ஒப்பந்தங்கள் செய்ய நம் தலைவர்கள் முன்பு துணிவு காட்டவில்லை. ‘ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகள், இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா? சாத்தியம் கிடையாது. பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு அப்போது தயங்கினர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், நானோ டெக்னாலஜி, ரோபோடிக்ஸ் இவற்றைக் கற்றுகொண்டு, வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    No comments