கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவுக்கு நேரடி விமான போக்குவரத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. 2020-ம் ஆண்டுக்கு முன்பு வரை இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த சேவைகளை இந்திய மற்றும் சீன விமான நிறுவனங்கள் நேரடியாக வழங்கி வந்தன. மேலும், இந்த சேவைகள் நிறுத்தப்பட்டதற்கு கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
இந்த நிலையில் கொல்கத்தாவில் இருந்து சீனாவின் குவாங்சோவுக்கு வருகிற 26-ந்தேதி முதல் விமான சேவைகளை தினந்தோறும் வழங்க இருப்பதாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு, இண்டிகோ நிறுவனம் டெல்லி-குவாங்சோ இடையே நேரடி விமான போக்குவரத்துகளை விரைவில் அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் கூறுகையில்,
“இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே தினசரி விமானங்கள் மீண்டும் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவின் 2 இடங்களில் இருந்து சீனாவுடன் நேரடி இணைப்பை மீண்டும் தொடங்கிய முதல் நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த மிக முக்கியமான நடவடிக்கையின் மூலம், சீனாவிற்குள் மேலும் நேரடி விமானங்களை அறிமுகப்படுத்த நாங்கள் பரிசீலித்து வருகிறோம்” என்று கூறினார்.
“இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான அறிகுறியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு இடையே தொடர்ச்சியான தொழில்நுட்ப அளவிலான ஈடுபாட்டை தொடர்ந்து இது வழங்கும்” என்று மத்திய அமைச்சகம் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.
0 Comments