ரத்தமாற்றம்..... 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி..... அதிர்ச்சி தகவல்கள்

 


நமது நாட்டில் அரசு மருத்துவமனையை நம்பியே ஏழை மக்கள் இருக்கிறார்கள். எந்தவொரு பிரச்சினை என்றாலும் அவர்கள் அரசு மருத்துவமனையையே நாடுகிறார்கள். பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மக்களுக்குத் தேவையான சிகிச்சை கிடைக்கிறது என்ற போதிலும், சில அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் நடக்கும் அலட்சியங்கள் மனித உயிருக்கே உலை வைக்கின்றன.

அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 5 குழந்தைகள் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மருத்துவமனையில் அவர்களுக்கு ரத்தம் ஏற்றப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்தே குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது.கைபாசாவில் உள்ள அரசு மருத்துவமனையில் தான் இந்தக் கொடூரம் நடந்துள்ளது. ஏழு வயதான அந்தக் குழந்தைக்கு தலாசீமியா பாதிப்பு இருந்துள்ளது. இதையடுத்து அந்தக் குழந்தைக்கு ரத்தம் ஏற்றப்பட்ட நிலையில், அக்குழந்தைக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது. இப்படி மொத்தம் 5 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரிக்க ராஞ்சியிலிருந்து 5 பேர் கொண்ட உயர்மட்ட மருத்துவக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

முதற்கட்ட விசாரணையிலேயே அங்குப் பல அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி உள்ளது. நேற்று சனிக்கிழமை நடத்திய ஆய்வில், தலாசீமியாவால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஒட்டுமொத்தமாக 5 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு உறுதியானது. இந்தக் குழந்தைகள் அனைவரும் அதே மருத்துவமனையில் தொடர்ந்து ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக டாக்டர் தினேஷ் கூறுகையில்,

தலாசீமியா நோயாளிகளுக்கு மோசமான ரத்தம் செலுத்தப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணையின்போது ரத்த வங்கியிலும் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவற்றைச் சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன என்றார்.

ரத்த வங்கியில் ரத்த மாதிரி பரிசோதனை, பதிவுகளைப் பராமரித்தல் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுதல் என பல விஷயங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இது குறித்து மாநில சுகாதாரத் துறையிடம் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்து இந்தத் தொற்று எப்படிப் பரவியது என்பதைக் கண்டறிய விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட சிவில் சர்ஜன் டாக்டர் சுஷாந்தோ குமார் மஜீ கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments