திருச்செந்தூரில் நாளை கந்த சஷ்டி விழா தொடக்கம்


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கடற்கரையில் புனித நீராடி சாமி தரிசனம் செய்கின்றனர். திருச்செந்தூர் சென்று மும்மூர்த்திகளின் வடிவமாக காட்சி தரும் முருகப்பெருமானை வழிபட்டால், முருகனின் அறுபடை வீடுகளையும் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு நடக்கும் கந்தசஷ்டி விழாவையும், சூரசம்ஹாரத்தையும் காண பக்தர்கள் திரண்டு வருவர்.

அவ்வகையில் இந்த ஆண்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை (22.10.2025) தொடங்க இருக்கிறது. மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் 6 நாட்கள் வரை சஷ்டி விரதமும், அதன் முடிவில் சிகர நிகழ்ச்சியாக 27-ந்தேதி மாலை 4.30 மணியளவில் சூரசம்ஹாரமும் நடைபெற இருக்கிறது. இதையடுத்து ஏழாம் நாளான 28-ந்தேதி முருகப்பெருமான்- தெய்வானை திருக்கல்யாணமும், அதனை அடுத்து 5 நாட்களுக்கு ஊஞ்சல் சேவையும் நடைபெற உள்ளது.குறிப்பாக, 27-ந்தேதி நடைபெற இருக்கும் சூரசம்ஹாரம் நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவிழா நாட்களில் தங்கியிருந்து விரதம் இருக்கும் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் ஆங்காங்கே தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் திருத்தலத்தில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என 4 உற்சவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதியும் உள்ளன. இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என அழைக்கின்றனர். இவரே திருக்கல்யாணத்தின்போது உற்சவ மூர்த்தியாக எழுந்தருள்வார். அதேபோல் சூரசம்ஹாரத்தின்போது ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சக்தி வேல் தாங்கி, சூரனை சம்ஹாரம் செய்வார்.

Post a Comment

0 Comments