திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மயான பூமியில் மனைவி, மகளுடன் ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வருவது மட்டுமின்றி அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம் பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானம் பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகம் வைத்துள்ளார்.
இது குறித்து யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,திருச்சியில் மயான பூமியில் மனைவி, மகளுடன் உரிமை கோரப்படாத ஆதரவற்றஅனாதை பிரேதங்களை நல்லடக்கம் செய்து வருகிறோம்.மரணமானது துயரத்தின் உச்சம் ஆகும்.
இறந்தவரின் உடலை அவரின் சொந்த இருப்பிடத்துக்கோ, வீட்டுக்கோ, நெருக்கமானவர்களுக்கோ ஊருக்கோ உறவினர்க்கோ தகவல் கொடுக்க முடியாமல் பெயர் விலாசம் தெரியாத உரிமை கோரப்படாத உடல்கள் ஏராளம். இப்படி உரிமை கோரப்படாத உடலை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வருகிறோம். மரணம் ஒன்று தான். சம்பவங்கள் பல. இதன் வலியும் வேதனையும் வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. விபத்தில் பலியாகி உடல் மூட்டையாய் வந்ததும் உண்டு. ஆற்று மதகில் ஊறிய நிலையில் கிடந்த உடலும் உண்டு. மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் பிச்சைக்காரர்கள் யாசகம் கேட்டு ஜுவனம் நடத்தி வருகிறார்கள்.பிச்சைக்காரர்கள், பார்வை குறைபாடு, ஊனமுற்றோர், தொழுநோயாளிகள், மூத்த குடிமக்கள், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், வாழ்வாதாரம் இழந்து தவிப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்,
பலர் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், போக்குவரத்து சிக்னல், சுற்றுலா தலங்கள், கோயில்கள் மற்றும் வழக்கமான கூட்டம் அதிகமாக இருக்கும் பல பகுதிகளில் பலர் பல நிலைகளில் பிச்சை எடுப்பவர்கள் சிலர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கின்றனர், சிலர் கிழிந்த மற்றும் அழுக்குத் துணியுடன் அமர்ந்திருக்கின்றனர், சிலர் போர்வையால் உடலை மூடிக்கொண்டு தூங்குகின்றனர், சிலர் தங்கள் முழு குடும்பத்தினருடனும் அமர்ந்திருக்கின்றனர், அவர்கள் ஊனமுற்றவர்களாகவோ, வேலை செய்ய இயலாமையினாலோ, வயதானவர்களாகவோ அல்லது பார்வையற்றவர்களாகவோ அல்லது அடிப்படைத் தேவைகளுக்கு உண்மையில் பணம் தேவைப்படுவதாலோ பிச்சை எடுக்கிறார்கள். இவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்ந்து, தங்கள் வாழ்வாதாரத்திற்காக பிச்சை எடுக்கின்றனர்.ஆனால் பிச்சை எடுப்பதை சிலர் தொழிலாக தொடர்வது வருத்தமளிக்கிறது.வீடற்ற நிலையில் பணம் அல்லது உணவு போன்றவற்றை பிறரிடம் இருந்து கேட்டுப் பெறும் நபர்கள், பல சமூக சிக்கல்களுடன் போராடுகிறார்கள்.
இவ்வாறு யாசகம் கேட்பவர்கள் வறுமை, மனநலப் பிரச்சினைகள், உடல் நலக்குறைவு, முதுமை போன்ற பல்வேறு காரணங்களில் காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு வீடற்றவர்களாகவும், பிச்சைகாரர்களாகவும் உள்ளனர். பொருளாதாரக் காரணம் மற்றும் குறைந்த ஊதியம் காரணமாக பலர் வீடற்றவர்களாக மாறுகிறார்கள். மனநலப் பிரச்சினைகள் மற்றும் போதைப்பொருள் அடிமை போன்றவையும் வீடற்ற நிலைக்கு ஒரு காரணமாக உள்ளது.வீடற்ற பிச்சைகாரர்கள் பல சமூக புறக்கணிப்புகளை எதிர்கொள்கிறார்கள்.
வீடற்ற பிச்சைகாரர்கள் வேலை செய்ய மறுக்கிறார்கள், பிச்சை எடுத்து ஜீவனம் நடத்திய இருபாலரும் பேருந்து நிறுத்தத்திலோ, சாலை ஓரத்திலோ இறந்தவர்களும் உண்டு. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துவிட்டு சென்றவர்களும் உண்டு.
புராண, இதிகாச காலம்தொட்டு மயானங்களில் இந்து மதத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலை இன்றளவும் தொடர்ந்து வருகிறது. ஒரு வீட்டில் இறப்பு ஏற்பட்டால் சுடுகாட்டில் அல்லது உடலை புதைக்கும் இடுகாட்டில் ஆண்கள் தான் இறுதி காரியங்களை செய்து வருவார்கள். பெண்கள் வீட்டில் காரியங்களை செய்வதோடு சரி. சுடுகாட்டில், மயானத்தில் காரியங்கள் செய்வதற்கு பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை. உயிருக்கு உயிராக நேசித்த கணவர் அல்லது பிள்ளைகள் அல்லது நெருங்கிய உறவினர்களின் உடலுக்குக்கூட அந்த இடத்தில் இறுதியாக முகத்தை கூட பார்க்க அனுமதிக்கப்படாத இந்த உலகில் மனைவி மகளுடன் ஆதரவற்ற அனாதை பிரேதங்களை அடக்கம் செய்து வருகிறோம். மனைவி சித்ரா வழக்கறிஞர் பணியினை செய்து வருகிறார். மகள் கீர்த்தனா வழக்கறிஞர் பட்டப்படிப்பினை படித்து வருகிறார்.
உலகம் எவ்வளவோ முன்னேறினாலும் வறுமை மாறாமல் தொடா்கிறது.கொடிது கொடிது வறுமை கொடிது வறுமையின் விளைவை களப் பணியால் அறிந்து அதற்குண்டான அணுகு முறை கொள்கையுடன் தினசரி உணவகங்களில் உபரியாகும் உணவினை பெற்று வறியவர்களுக்கும் எளியவர்களுக்கும் ஆண்டு தோறும் உணவளித்து வருகிறோம்.
வறுமையை உணா்வுப்பூா்வமாக கள ஆய்வில் கண்டுள்ளோம். ‘ஏழ்மையான பொருளாதாரத்தாலோ முதுமை மற்றும் நோயின் அடிப்படையில் காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு சாலையோரங்களிலேயே உண்டு உறங்கி கையேந்தி பிச்சை எடுத்து ஜீவனம் நடத்தி மருத்துவ சிகிச்சை இன்றி உடல் நலம் குன்றி குற்றுயிராக உருக்குலைந்து அழுக்கு படிந்த உடல், ஏக்கம் நிறைந்த கண்கள், கறை படிந்த பற்கள், கிழிந்த உடையுடன் சாலை ஓரங்களிலேயே இறந்து போய் விடுகிறார்கள். இவர்கள் போதிய பண வசதி இல்லாமல் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருவது எங்களது ஆய்வில் தெரிகிறது.
உற்றார் உறவினர் சகோதர சகோதரிகள் உதாசீனத்தால் உறவின்றி பொது மக்களிடம் கையேந்தி வாழ்க்கையினை நடத்துகின்றனர். பல ஏளனத்திற்கு ஆளானவர்கள் படும் கோபம், வேதனை, துக்கம், துயரத்தால் இவர்கள் நிம்மதியாக தூங்கவோ, வேலை செய்யவோ அல்லது சாப்பிடவோ முடிவதில்லை. இவர்களது வேதனைக்கு முக்கியக் காரணியாய் அமைவது உடல்நலக் குறைவும் முதுமையும் தான். மிகவும் ஏழ்மையான வா்க்கத்தைச் சோ்ந்தவர்கள் சாப்பிடுவதை குறைத்தும், ஒரு வேளை சாப்பிடுவதை முற்றிலும் தவிா்த்தும் உள்ளனா் . இதனால் இவா்களின் மகிழ்ச்சியும் காற்றோடு கலந்து விடுகிறது.ஏன் அடிப்படை உரிமைகளான வீட்டை இழந்து குடும்பத்தை மறந்து தங்களின் சமூகப் பிணைப்பில் இருந்து விலகி ஒரு நிலையற்ற வாழ்வை வாழ்கின்றனா்.
இப்படி வறுமையில் வாழும் அவா்களின் துன்பங்களும் துயரங்களும் குறித்து சொல்லப்படாதவை ஏராளம். எப்படி இருப்பினும் இன்னும் வறுமை தீா்ந்தபாடில்லை தொடர்கிறது.
ஆதரவற்ற அனாதை பிரேத நல்லடக்க பணியினை மனைவி, மகளுடன் செய்யும் போது பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். என்னைப் பொறுத்தவரை இது ஒரு புனிதப் பணியாக நான் கருதுகிறேன். இவர்களுக்கு மரியாதை செய்ய ஆளில்லை மலர்மாலை அணிவிக்க யாருமில்லை இறுதி ஊர்வலத்திற்கு யாருமில்லை. பிரேதத்திற்கு வாய்க்கு அரிசி போட ஆளில்லை.
இறந்த நபருக்கு ஒரு மகன் இருந்தால் ஒரு மகள் இருந்தால் ஒரு பேத்தி இருந்தால் என்ன செய்வார்களோ அந்த காரியத்தை நாங்கள் செய்கிறோம்.கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது பல உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம்.
மேலும் இருபத்தைந்து முறைக்கு மேல் குருதிக்கொடை அளித்துள்ளேன். வாழ்நாளிற்கு பிறகு படமாய் இருப்பதை விட படமாய் இருப்போம் என எனது உடலினை தானமாக வழங்க உறுதியேற்று மனைவி மகள் ஒப்புதழுடன் திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் பதிவு செய்துள்ளேன் என்றார்.
0 Comments