திருக்குவளை அருகே இடிந்து விடும் அபாய நிலையில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்


நாகை மாவட்டம், திருக்குவளை வட்டம், வலிவலம் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் மிக மோசமான நிலையில் உள்ளது. பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் புறக்கணிக்கப்பட்டதால், கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

தினசரி சேவைகள் பெற ஏராளமான பொதுமக்கள் இங்கு வருகை தருகின்றனர். குறிப்பாக சாகுபடி காலங்களில் சிட்டா அடங்கல் பெறுவது, பட்டா மற்றும் தங்கள் வசமுள்ள  நன்செய் மற்றும் புன்செய்  நில  புல எண் விவரம் பெறுவது, ஆவணங்களை சமர்ப்பிப்பது, புகார்கள் பதிவு செய்வது, கிராம திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் போன்ற அத்தியாவசிய பணிகள் இக்கட்டிடத்தில் நடைபெறுகின்றன.

அந்த கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலரின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது.

மேலும் ஒரு சில சமயங்களில் குறிப்பாக மழைக்காலங்களில் கட்டிடத்தின் கான்கிரீட் பூச்சிகள் சிறிது சிறிதாக இடிந்து விழுந்து வருவதால் நேரடியாக மக்கள் சேவைக்கு தடையாகவும்,  பாதுகாப்பு பிரச்சனைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உடனடியாக புதிய கட்டிடத்தை கட்டிக்கொள்ள கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இது மூலமாக, தினசரி சேவைகள் சீராக நடைபெறவைக்கும், பாதுகாப்பு உறுதி செய்யப்படும் மற்றும் கிராம நிர்வாக பணிகள் எந்த தடையுமின்றி இயங்கும் வாய்ப்பு உருவாகும்.

உடனடி நடவடிக்கை எடுத்து பழைய கட்டிடத்தை இடித்து, புதிய, பாதுகாப்பான அலுவலக கட்டிடத்தை அமைக்க வேண்டும் என்று ஊராட்சி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்குவளை நிருபர் த.கண்ணன்  


Post a Comment

0 Comments