தமிழக அரசின் மதுவிற்பனை நிறுவனமான டாஸ்மாக்-இல் நடந்ததாக கூறப்படும் ரூ.1,000 கோடி முறைகேடு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பல்வேறு விதமான நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என்று அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு தடைவிதிக்க தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் இரண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன.அந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், டாஸ்மாக் முறைகேடு குறித்த அமலாக்கத்துறை விசாரணைக்கு தற்காலிகத் தடைவிதித்து, அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் பல முக்கியமான கேள்விகளை எழுப்பினர். அவர் “சந்தேகம் எழுந்தாலே உடனடியாக அமலாக்கத்துறை தலையிடலாமா? அமலாக்கத்துறை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது. மாநில அரசு விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது, கூட்டாட்சிக்கு எதிராக அமலாக்கத்துறை நேரடியாக மாநில அலுவலகங்களில் நுழையலாமா? மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அமலாக்கத்துறை, சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக மட்டுமே விசாரித்து வருவதாகவும், டாஸ்மாக் நிறுவன ஊழல் குறித்து மாநில போலீசும் விசாரணை நடத்தி வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழக அரசின் சார்பில் வாதிடும் வழக்கறிஞர்கள், “அமலாக்கத்துறை அதிகாரிகள் டாஸ்மாக் அலுவலகத்திற்குள் நுழைந்து ஊழியர்களின் செல்போன்களை வலுக்கட்டாயமாக பறித்துள்ளனர். அவர்களின் தனிப்பட்ட தரவுகளை அனுமதியின்றி பதிவிறக்கம் செய்தது, தனிநபர் உரிமையை மீறும் செயல். உச்சநீதிமன்றம் பலமுறை எச்சரித்தும், இத்தகைய அத்துமீறல் நடவடிக்கைகள் தொடர்கின்றன” என வாதிட்டனர்.
இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி அமலாக்கத்துறை சார்பாக இதற்கு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி, வழக்கை ஒத்திவைத்தது. இந்த நிலையில் டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் உச்சநீதிமன்றம் நீடித்துள்ளது. மேலும் கடந்த ஆறு வருடங்களாக அமலாக்க துறையின் நடவடிக்கைகளை தான் கவனித்து வருவதாகவும் அது குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்ததோடு அது பற்றி பேசினால் ஊடகங்களில் மீண்டும் செய்தியாகும் என்றும் அதிருப்தி தெரிவித்தார்.
0 Comments