புதுக்கோட்டை பொன்நகரைச் சேர்ந்தவர், பழனியப்பன். இவருடைய மனைவி சிவகாமி. இவர்களுடைய மகள் லோகபிரியா (வயது 20). கடந்த 27.4.2021 அன்று லோகபிரியா வீட்டுக்கு சிவகாமியின் சகோதரி மகனான, லட்சுமணன் என்ற சுரேஷ் (32) வந்தார்.
அவர் லோகபிரியாவிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அவர் பணம் இல்லை என்று கூறியதால், ஆத்திரம் அடைந்து, லோகபிரியாவை கத்தியால் குத்தியும், கம்பியால் தாக்கியும் கொலை செய்தார். பின்னர் அவர் அணிந்து இருந்த 1¼ பவுன் நகையை எடுத்துக்கொண்டு தப்பினார்.இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லட்சுமணனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கோர்ட்டு, லட்சுமணனுக்கு மரண தண்டனை விதித்து கடந்த மே மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து லட்சுமணன் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதே நேரத்தில் இந்த தண்டனையை நிறைவேற்றுவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கணேஷ்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தன. இதில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரரின் நோக்கம் பணம் மட்டுமே என்பது தெளிவாக தெரிகிறது. கொலை செய்த பின்பு நகையையும், மொபட்டையும் விற்றபோது எந்தவித பதற்றமும் இல்லாமல் இருந்துள்ளார். அவரது செயல் கொடூரமானது. இதனை நியாயப்படுத்த முடியாது. ஆனால் மனுதாரரால் சமூகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
எனவே மேல்முறையீட்டு மனுதாரருக்கு விதித்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுகிறோம். அவர் இயற்கையாக மரணம் அடையும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 Comments