ஒரு அடி கொடுத்தால், இரண்டு அடி திருப்பிக் கொடுப்பவன் நான்..... அண்ணாமலை ஆவேசம்

 


தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “இன்று சமூக ஊடகங்களில் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில் திருமாவளவன் சென்ற கார், பைக் மீது மோதியிருப்பது தெளிவாக தெரிகிறது. இதை மறைத்து வைத்து இன்று திருமாவளவன் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார். இது அவர்களை காப்பாற்றும் அரசாக மாறிவிட்டது என்பதை காட்டுகிறது.ஒரு சாதாரண நபர் சாலையில் செல்வதை மோதிய பிறகும், அதைக் கேவலப்படுத்தி பேசுகிறார்கள். கேள்வி கேட்டால் மிரட்டுகிறார்கள். பின்னர் முதல்வரை சந்தித்து புகார் கொடுப்பதாக கூறுகிறார்கள். மேலும், திருமாவளவன் பத்திரிகையாளர் சந்திப்பில் எனது பெயரை இழுத்து, நான் இதற்குப் பின்னால் இருப்பதாக கூறியுள்ளார். அந்த டூவீலர் யார் என எனக்குத் தெரியாது. நான் ஒரு பொதுமகனாகவே குரல் கொடுக்கிறேன்.

திருமாவளவன் நாகரிகமான அரசியலுக்கு திரும்ப வேண்டும். வெறுப்பு, வன்முறை, மிரட்டல், சாலையில் தாக்குதல் — இவை எந்த வகையான அரசியல்? இவர்கள் தமிழகத்தில் எந்த மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறார்கள்? வன்முறை அரசியலால் யாருக்கும் லாபம் இல்லை. அதற்காக நாங்கள் பயப்பட மாட்டோம். என்மீது ஒருவர் ஒரு அடி கொடுத்தால், இரண்டு அடி திருப்பிக் கொடுப்பவன் நான். மிரட்டல், அழுத்தம் — இவை எனக்கு பொருந்தாது. காவல்துறையில் இருந்தபோது பல ரவுடிகளை சமாளித்துள்ளேன். அதனால் இப்படியான மிரட்டல்கள் என்னிடம் பயனில்லை,” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது: “முதல்வர் ஸ்டாலின் ஏன் இந்தச் சம்பவத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை? ஏன் கைது நடவடிக்கை எடுக்கவில்லை? வீடியோவில் தெளிவாக வன்முறை தெரிகிறது. சம்பவ இடத்தில் கூட்டணிக் கட்சியின் எம்.பி. காரில் இருந்து இறங்கியிருப்பதும் தெரிகிறது. ஒரு சாதாரண மனிதரின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால், காவல்துறை அமைச்சராக முதல்வர் ஸ்டாலின் அந்தப் பதவியில் இருக்கலாமா? கூட்டணிக் கட்சியின் தலைவர்களுக்காக சட்டத்தை மடக்குவது சரியல்ல. முதல்வர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுத்து, காவல்துறையின் மரியாதையையும் அரசின் நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டும்,” என்றார்.

அத்துடன், கரூர் நிகழ்வை குறித்து அண்ணாமலை மேலும் தெரிவித்ததாவது:

“கரூரில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். ஆனால் ஒரு அரசு அதிகாரி மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சட்டசபையில் முதல்வர் வழக்கம்போல அரசையும் காவல்துறையையும் காப்பாற்றும் வகையில் பேசியுள்ளார். மேலும் உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதில் உண்மை வெளிவரும். தமிழக அரசு சி.பி.ஐ.க்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,” என அண்ணாமலை வலியுறுத்தினார்.

Post a Comment

0 Comments