ஜனாதிபதி திரவுபதி முர்மு அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்திற்கு இன்று வருகை தந்து, ரபேல் போர் விமானத்தில் பயணிப்பார் என்று ஜனாதிபதி மாளிகை நேற்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ரபேல் போர் விமானத்தில் பயணிப்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்திற்கு இன்று காலையில் வருகை தந்தார். அவருக்கு விமானப்படை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ரபேல் போர் விமானத்தில் பயணித்தார்.
முன்னதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 2023-ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப்படை தளத்தில் சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பயணித்திருந்தார். அவருக்கு முன்பு முன்னாள் ஜனாதிபதிகள் அப்துல் கலாம் மற்றும் பிரதீபா பாட்டீல் ஆகியோர் சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பயணித்திருந்தனர்.
பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரபேல் போர் விமானங்கள், கடந்த 2020-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரின்போது ரபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments