மக்களை ஏமாற்றுவதுதான் திமுக அரசின் வேலை. திமுக ஆட்சி என்பது உருட்டுக்கடை அல்வா. இந்த அரசாங்கத்தில் இப்படிப்பட்ட அல்வாதான் கிடைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
சட்டமன்றத்தில் இருந்து இன்று (அக்டோபர் 17) அதிமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில், சட்டமன்ற வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தை 73 ஆண்டுகாலம் பல்வேறு ஆட்சியாளர்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். இந்த காலத்தில் மொத்தமாக 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருக்கிரார்கள். அதில் ஜெயலலிதா 2011-ல் பதவி ஏற்றபோது திமுக அரசு விட்டுச்சென்ற கடன் 1 லட்சத்து 16 ஆயிரம் கோடி. 2021ல் நாங்கள் ஆட்சியை விட்டுச் செல்லும்போது 10 ஆண்டு கால ஆட்சியின் கடன் 4.08 லட்சம் கோடி மட்டும் தான். ஆனால் 4 ஆண்டு கால ஆட்சியில் திமுக வாங்கிய கடன் 4.52 லட்சம் கோடி. ஆனால், மூலதனச்செலவோ பெரிய அளவில் இல்லை. இந்த கடன் சுமை மக்கள் தலையில்தான் விழும் என்பது நிஜம்.
இந்த விவரத்தை சொன்னால் நீங்கள் வாங்கிய கடனுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி வட்டி கட்டினோம் என்று நிதியமைச்சர் சொல்கிறார். நாங்கள் வாங்கிய கடனுக்கு அல்ல, நீங்கள் வாங்கிய கடனுக்கும் சேர்த்துதான் அந்த வட்டி இருக்கிறது. ஒவ்வொரு அரசும் வாங்கிய கடனை பின்வரும் அரசு கட்டுவது வழக்கம். அதை வாதமாகப் பேசுவது முறையல்ல.
அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தோம். கல்லூரிகள், தடுப்பணைகள் கட்டினோம். மூலதனச் செலவு அதிகமாக இருந்தது. ஆனால் திமுக அரசில் வருவாய் செலவு கூடியிருக்கிறது. மூலதனச் செலவு அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் இங்கு வருவாய் செலவு அதிகமாகி இருக்கிறது. இந்த கடனை எப்படி திருப்பி செலுத்த முடியும்?
திமுக தனது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தின் நிதி மேலாண்மை சரி செய்யப்படும் என்று சொல்லியிருந்தது. நிதி மேலாண்மை குழு அமைக்கப்படும் என்ரு கூறியிருந்தது. நிபுணர் குழுவை அவர்கள் அமைத்த பிறகு கடன் வாங்கியதுதான் அதிகமாக இருக்கிறது. 73 ஆண்டுகளில் வாங்கிய கடனை விட, இந்த ஆட்சியில் நான்கரை ஆண்டு காலத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள்” என குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து அவர், “கிட்னி முறைகேடு குறித்து நான் சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கு சாரியான பதில் கிடைக்கவில்லை. புரோக்கரை தான் கைது செய்திருக்கிறார்கள். எந்த மருத்துவமனையில் முறைகேடாக கிட்னி அறுவை சிகிச்சை செய்தார்களோ அந்த மருத்துவமனை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அமைச்சர் ஏதேதோ சொல்லி மழுப்பிவிட்டார். மருத்துவமனை முறைகேட்டில் ஈடுபட்டதால் தான், புரோக்கர்கள், ஏழைகளுக்கு பணத்தாசை காட்டி கிட்னி எடுத்துள்ளனர். இதற்கு மருத்துவமனையும் ஒரு முக்கிய காரணம்.
ஆனால் திமுக எம்எல்ஏவின் சொந்த மருத்துவமனை என்பதால் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுரை உயர்நீதிமன்றக் கிளை சிறப்பு விசாரணைக் குழு அமைத்துள்ளார்கள். அந்த தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படவில்லை. அவர்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மருத்துவமனையில் சோதனை செய்து அறிக்கையை கொடுத்தது திமுக அரசு தான். ஆனால் நடவடிக்கை எடுக்காமல், இருப்பதும் அவர்கள் தான். கிட்னி முறைகேட்டில் யாரெல்லாம் முறைகேடு செய்தார்களே அவர்கள் மீது நடவடிக்க எடுக்க வேண்டும். உயர்நிதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வதும் திமுக அரசு தான்” என்றார்.
மேலும், “தொழில்துறை அமைச்சர் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் 15 ஆயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக கூறினார். ஆனால் அந்த நிறுவனம் அதை மறுத்துள்ளது. இதுதொடர்பான விவாதம் சட்டமன்றத்தில் வந்தபோது தொழில்துறை அமைச்சர், “ஃபாக்ஸ்கானில் பல துணை நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் ஒரு நிறுவனம்தான் தமிழகத்தில் முதலீடு செய்யப்போவதாகச் சொல்கிரார். அப்படியென்றால் ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனம் எது என்று சொல்லுங்கள். எல்லாமே வெற்று அறிவிப்பு. அத்தனையும் பொய் அறிவிப்பு.
இந்த அரசு அமைந்தபிறகு எவ்வளவு தொழில் தொடங்கப்பட்டுள்ளன என்று வெள்ளை அறிக்கை கேட்டால் அமைச்சர் வெள்ளைத் தாளை காட்டுகிறார். அதுதான் உண்மை. வெள்ளைத்தாள் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் இந்நாட்டின் நிலை உள்ளது.
முதல்வர் ஜெர்மனிக்குச் செல்லும்போது செய்தியாளர்களிடம், ‘10 லட்சத்து 62 ஆயிரம் கோடி முதலீடு பெற்றுள்ளதாகச் சொன்னார். 77 சதவீதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் சொன்னார். அப்படி நிறைவேற்றப்பட்டிருந்தால் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்கும். ஆனால் அப்படி எந்த சம்பவமும் தமிழகத்தில் நடந்ததாகத் தெரியவில்லை. பெரிய தொழில் வர 3 ஆண்டுகள் ஆகும். ஆனால் தமிழக முதல்வர் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவுடனே தொழில் தொடங்கியதாக தவறான கருத்தைத் தெரிவிக்கிறார்.
சுமார் 60 ஆயிரம் கோடிதான் தமிழகத்துக்கு முதலீடு வந்துள்ளதாக மத்திய அரசு அறிக்கை கொடுத்துள்ளது.
சமீபத்தில் தருமபுரிக்குச் சென்ற முதல்வர் இனி விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்துக்குப் போய் மனு கொடுக்க அவசியம் இல்லை. ஆன்லைன் மூலம் பயிர்க்கடன் வாங்கலாம் என்று அறிவித்தார். இதுவரை 4,400 கூட்டுறவு சங்கத்தில் இந்த முறை பின்பற்றப்படவில்லை. மக்களை ஏமாற்றுவதுதான் இந்த அரசின் வேலை’’ என்றபடி உருட்டுக்கடை அல்வா பாக்கெட் எடுத்துக் காட்டிய அவர்,
”திமுக ஆட்சி என்பது உருட்டுக்கடை அல்வா… இந்த அரசாங்கத்தில் இப்படிப்பட்ட அல்வாதான் கிடைக்கும். கடந்த 2021ம் ஆண்டில் தீபாவளியின்போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். அதில் 10% அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார். இந்த உருட்டுக்கடை அல்வாவை பிரிச்சுப் பாருங்க… எப்படி டேஸ்டா இருக்குதான்னு சொல்லுங்கள்” எனக்கூறி அந்த திமுக உருட்டு அல்வா பாக்கெட்டுகளை பத்திரிகையாளர்களிடம் கொடுத்தார்.
இந்த அரசு அமைந்தபிறகு எவ்வளவு தொழில் தொடங்கப்பட்டுள்ளன என்று வெள்ளை அறிக்கை கேட்டால் அமைச்சர் வெள்ளைத் தாளை காட்டுகிறார். அதுதான் உண்மை. வெள்ளைத்தாள் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் இந்நாட்டின் நிலை உள்ளது.
‘‘கடந்த 2021ம் ஆண்டில் தீபாவளியின்போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். அதில் 10% அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார். இந்த உருட்டுக்கடை அல்வாவை பிரிச்சுப் பாருங்க… எப்படி டேஸ்டா இருக்குதான்னு சொல்லுங்க’ என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
0 Comments