ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி தேர்தல் சோதனை சாவடியில் ராஜேஸ்வரன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நள்ளிரவு சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் 18 பெட்டிகளில் ரூ. 9.5 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் மற்றும் வெள்ளி பொருட்களை வியாபாரத்திற்காக உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து, ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்ல தேவையான ஆவணங்கள் மற்றும் முறையான ரசீதுகள் இல்லாததால் காரில் இருந்த பொருட்களைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்த பொருட்கள் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாயல்குடியில் வாகன தணிக்கையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 9.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments