நாகை: திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி



திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித்திட்ட (NSS) சிறப்பு முகாம் திங்கள் கிழமை நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒருபகுதியாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

இந்த பேரணியை கல்லூரி புலமுதல்வர் அ.கலைச்செல்வன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

கல்லூரியின்  அனைத்து துறையைச் சேர்ந்த துறை தலைவர்களும் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய பகுதிகளான கடைவீதி, காவல் நிலையம் வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் கையில் பதாகைகள் ஏந்தி, வாக்குரிமை ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதையும் அதை தவறாமல் பயன்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். மேலும் நல்ல தலைவரை தேர்வு செய்வதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கலாம் என்பதையும் எடுத்துரைத்தனர். முழுமையான வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதையும், வாக்குகளை விற்காமல் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதையும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளரும், கணிதவியல் உதவி பேராசிரியருமான க.ஸ்ரீதர் செய்திருந்தார்.



இதில் ஊராட்சி செயலர் சரவணபெருமாள், கிராம நிர்வாக அலுவலர் குமார், முதல் நிலைக் காவலர் பாபு ஜெகஜீவன், ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் க.வேதபாண்டியன், இயற்பியல் துறை உதவி பேராசிரியர் த.செந்தமிழ்ச்செல்வன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, மாணவர்களிடையே சமூகப் பொறுப்புணர்வை வளர்த்ததுடன், பொதுமக்களிடமும் தேர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments