ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி க்ஷத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் மாலை பூக்குழி திருவிழா நடைபெற்றது. முன்னதாக 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னிச் சட்டி,பால்குடம், பூப்பெட்டி, கரும்பாலை தொட்டில்,அங்கப் பிரதாட்சனை உட்பட ஏராளமான நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர். மாலை கோவில் முன்பு 100 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண் பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இதில் பக்தர் பெரிய வேல் குத்தி பக்தியுடன் பூக்குழி இறங்கினார்.இந்த பூக்குழி திருவிழாவை 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர். இரவு அம்மன் இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட பெரிய தேரில் நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர். திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் க்ஷத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்து வருகின்றனர்.

0 Comments