நாகை மாவட்டம் திருக்குவளை அருகே மேலவாழக்கரை ஊராட்சி இராமன்கோட்டகம் ஏர்வைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலின் ஆண்டு தீமிதி திருவிழா மிகுந்த பக்தி உற்சாகத்துடன் நடைபெற்றது.திருவிழா கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்வுடன் தொடங்கியது. அதன் பின்னர் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, அம்மனுக்கு 14 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, சக்தி கரகத்துடன் காப்பு கட்டிய பெண்கள் மற்றும் ஆண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், குளக்கரையிலிருந்து ஊர்வலமாக வந்து, தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். பக்தர்களின் “அம்மன் போற்றி” முழக்கங்களால் கிராமம் முழுவதும் ஆன்மிகச் சூழல் நிலவியது.இந்நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் விழாக்குழு தலைவர் ஐயப்பன், செயலாளர் தாமரைச்செல்வன், நிர்வாகிகள் விஜயராகவன், முத்துராமன், நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலவாழக்கரை, இராமன்கோட்டகம், ஏர்வைக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் இறை அன்பர்கள் திரளாக பங்கேற்றனர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்




0 Comments