திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் தவெக தலைவர் விஜய்

 



நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுகிறார். முன்னதாக வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அன்றைய தினமே பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய இரு தொகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். 

தொடர்ந்து வில்லிவாக்கம் மற்றும் அண்ணாநகர் தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்ய இருந்தார். ஆனால் பாதுகாப்பு கருதி பிரசாரத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தனர். நேற்று மற்றும் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.இந்த சூழலில் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இன்று (வியாழக்கிழமை) காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் திருச்சிக்கு சென்றார்.

இந்நிலையில் கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் அமைந்துள்ள திருச்சி மாநகராட்சி இரண்டாவது மண்டலக்குழு அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதன் பின்னர் திறந்த வேனில் நின்றபடியே மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே விஜய் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதன்பின்னர் காந்தி மார்க்கெட், டி.வி.எஸ். டோல்கேட் வழியாக விமான நிலையத்துக்கு சென்று சென்னைக்கு புறப்பட்டு செல்வார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் வேட்புமனு தாக்கல் செய்யும் மாநகராட்சி மண்டல அலுவலகம் மற்றும் பிரசாரம் செய்ய உள்ள மரக்கடை ஆகிய இடங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி நேற்று காலை நேரடியாக வந்து ஆய்வு செய்தார். எந்த பிரச்சினையும் ஏற்படாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதற்கிடையே, த.வெ.க. தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், மண்டல ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் நேற்று விஜய் பிரசாரம் செய்ய உள்ள இடத்தை பார்வையிட்டனர்.

Post a Comment

0 Comments