தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்ட தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், 2026 தேர்தலில் முதன்முறையாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுகிறது. விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். எடப்பாடி தொகுதியைத் தவிர மற்ற 233 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால், நடிகர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதில் தொடர்ந்து சுணக்கம் காணப்படுகிறது.விஜய் பிரச்சாரத்துக்கு வரும் போது அவரது வாகனங்களைப் பின்தொடரும் ரசிகர்கள் விபத்துகளில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. மேலும், பகல் நேரங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதால், கடும் வெயில் காரணமாக ரசிகர்கள் மயக்கம் அடைவது போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன.
சில இடங்களில் விஜய்யின் பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்க கடும் நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக விஜய் உள்ளிட்ட அவரது கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேசமயம், சில இடங்களில் அனுமதி வழங்கப்பட்ட பின்னரும் நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்படுகிறது.இந்தச் சூழலில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வினோத், கும்பகோணம் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஹாலோகிராம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நூதன முறையைக் கையாண்டுள்ளார். AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விஜய் பிரச்சாரம் செய்வது போன்ற ஹாலோகிராம் உருவத்தை உருவாக்கி பயன்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

0 Comments