ஸ்டிரைக் ஒத்திவைப்பு.... 17 இந்தியன் வங்கி அதிகாரிகள் ராஜினாமா

 


5 நாள் வங்கிப் பணி கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற இருந்த 3 நாள் வேலைநிறுத்தம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கத்தில் இருந்து 17 அதிகாரிகள் கூட்டாக ராஜினாமா செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அகில இந்திய இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் (AIIBOA) தலைவருக்கு நேற்று (செப்டம்பர் 28) அனுப்பப்பட்டுள்ள 4 பக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது: வங்கி ஊழியர்களின் உண்மையான மற்றும் முக்கியமான பிரச்சினைகளுக்காக சங்கங்கள் உறுதியாக நிற்கின்றனவா என்ற கேள்வி பலமுறை எழுந்துள்ளது. வங்கிப் பணியில் சேருவதற்கு கடுமையான போட்டித் தேர்வுகளையும் தேர்வு நடைமுறைகளையும் எதிர்கொள்கிறோம். ஆனால் இன்று அதிகப்படியான வேலை நேரம், அதனால் குடும்பத்துடன் செலவிட போதிய நேரம் இல்லாத நிலைமை என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போதும், ஜன் தன் திட்டத்தை செயல்படுத்தியபோதும், கொரோனா காலத்திலும் வங்கி ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றினர். விடுமுறை நாட்களிலும் பல்வேறு அரசு பணிகளுக்காக வேலை செய்துள்ளோம்.

அதேநேரத்தில் பணியிட மாற்றங்கள், விசாரணைகள் மற்றும் பணிச்சுமை ஆகியவை வங்கி ஊழியர்களின் வாழ்க்கையையும் குடும்ப வாழ்க்கையையும் கடுமையாகப் பாதித்துள்ளன.

5 நாள் வங்கிப் பணி கோரிக்கைக்கான தற்போதைய போராட்டத்தில் சங்கங்களுடன் நாங்களும் நம்பிக்கையுடன் நின்றோம். கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் ஏற்கெனவே ஒரு நாள் சம்பளத்தை இழந்துள்ளோம்.

செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமையும் பணிக்கு வர வேண்டிய அழுத்தத்தையும் சிரமத்தையும் எதிர்கொண்டோம். அன்று பணிநிமித்தமாக பயணம் செய்த வங்கி ஊழியர்கள் இருவர் சாலை விபத்தில் உயிரிழந்ததாக எங்களுக்குத் தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் உண்மையாக இருந்தால், இதனால் ஏற்பட்ட இழப்புக்கான பொறுப்பை சங்கத் தலைமை ஏற்க வேண்டும்.

அதேபோல செப்டம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற இருந்த 3 நாள் வேலைநிறுத்தத்திலும் பங்கேற்று மேலும் 3 நாள் சம்பளத்தை இழக்கத் தயாராக இருந்தோம். தேவைப்பட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும் பங்கேற்கத் தயாராக இருந்தோம்.

ஆனால் போராட்டத்திற்கு முந்தைய நாள் இரவு சங்க உறுப்பினர்களுக்குத் தெரிவிக்காமல் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் பங்கேற்று, உறுதியான முடிவு எதுவும் எட்டப்படாமலேயே போராட்டம் திரும்பப் பெறப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் போராட்டத்தின் பின்னால் நின்ற ஆயிரக்கணக்கான சாதாரண வங்கி ஊழியர்கள் ஏமாற்றப்பட்டதாகவும், துரோகம் செய்யப்பட்டதாகவும் உணரும் நிலை ஏற்பட்டுள்ளது. 7 லட்சத்துக்கும் அதிகமான வங்கி ஊழியர்களைக் கொண்ட வங்கித் துறையால், நியாயமான கோரிக்கைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

எனவே மிகுந்த ஏமாற்றத்துடன், அதேநேரத்தில் சக ஊழியர்கள் மீது எந்தவித கசப்புணர்வும் இல்லாமல், அகில இந்திய இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கத்தில் இருந்து நாங்கள் கூட்டாக ராஜினாமா செய்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








Post a Comment

0 Comments