தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு நாகப்பட்டினம் மாவட்டத்தின் சார்பில் இன்று ( 29.9.26 } நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடம் முன்பு மாவட்டத் தலைவர் ஆர்.சண்முகசுந்தரம் தலைமையில் முழு நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சு.வேலாயுதம், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் கணபதி, ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்க நிர்வாகி சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன் விளக்க உரையாற்றினார். நெடுஞ்சாலை துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.ரவிச்சந்திரன் துவக்க உரையாற்றினார். ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் சி வாசு, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் மனோகரன், அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கா.ராஜு, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஓய்வூதிய விதிகள் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், எட்டாவது ஊதிய குழுவின் வரம்பை மாற்றி அமைக்க வேண்டும், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும், ஓய்வூதியத்தில் சமநிலையை உருவாக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மூத்த குடிமக்களுக்கு ரயில் மற்றும் விமான கட்டணங்களில் 50 சதவீத சலுகை மீண்டும் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நாகப்பட்டினம் தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் ப.அந்துவன்சேரல் நிறைவுறையாற்றினார். ஓய்வூதியர் சங்க நாகப்பட்டினம் வட்டச் செயலாளர் ஆர் மாரிமுத்து நன்றி உரையாற்றினார்.

0 Comments