பல்டி அடிக்கும் கம்யூனிஸ்டுகள்..... தவெக கூட்டணியில் பாமக.... அமைச்சராகும் சவுமியா?

 


தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு, மே மாதம் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. தேர்தலில், தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் கட்சி இடையே 4 முனைப்போட்டி நிலவினாலும், எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான 118 தொகுதிகள் கிடைக்கவில்லை.

இதனால், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற த.வெ.க. (107 இடங்கள்) கூட்டணி ஆட்சி அமைத்தது. த.வெ.க.வுக்கு தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன.

இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த 2 தொகுதிகளில் ஆளுங்கட்சியான த.வெ.க. வெற்றி பெற்றாலும் அக்கட்சிக்கு சட்டசபையில் பலம் 109 ஆகத்தான் உயரும். அப்படியானால், இடைத்தேர்தலுக்கு காத்திருக்கும் 5 தொகுதிகளில் த.வெ.க. வெற்றி பெறுவதுடன் மேலும் 4 இடங்கள் அவசியம் தேவைப்படுகிறது.ஏற்கனவே, ஆட்சிக்கு ஆதரவு அளித்த இரு கம்யூனிஸ்டு கட்சிகள், த.வெ.க. கூட்டணியில் இல்லை என்று அறிவித்துவிட்டன. இடைத்தேர்தலையும் இரு கம்யூனிஸ்டு கட்சிகள் தனியாக சந்திப்பதால், எந்த நேரத்திலும் த.வெ.க. அரசுக்கான ஆதரவை விளக்கிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.

இப்படி கடும் நெருக்கடிக்கு மத்தியில் த.வெ.க. சிக்கித் தவிக்கும் நிலையில், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. (4) ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆரம்பத்தில் த.வெ.க. அரசை கடுமையாக விமர்சித்து வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அதன்பிறகு சற்று அமைதியான போக்கையே கடைபிடித்து வருகிறார். இது த.வெ.க. - பா.ம.க. கூட்டணியை உறுதி செய்வதாகவே தெரிகிறது.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு பிறகு த.வெ.க. அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சில அமைச்சர்கள் நீக்கப்படுவதோடு, சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்குள் த.வெ.க. கூட்டணிக்குள் பா.ம.க. வந்தால், அக்கட்சிக்கும் அமைச்சரவையில் ஒரு இடம் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதற்கு முதல்-அமைச்சர் விஜய்யும் பச்சை கொடி காட்டிவிட்டார் என்று கூறப்படுகிறது.

த.வெ.க.வுக்கு பா.ம.க. ஆதரவு அளிக்கும் பட்சத்தில், அக்கட்சியின் சட்டமன்ற தலைவர் சவுமியா அன்புமணி அமைச்சராக பதவியேற்பார் என்று தெரிகிறது. ஏற்கனவே, கடந்த சட்டசபை கூட்டத் தொடரில், அவரது செயல்பாடு மெச்சும்படி இருந்தது. மக்கள் பிரச்சினைகளை அவர் அவையில் எடுத்துவைத்த விதம் அனைவரது பாராட்டையும் பெற்றது.

சவுமியா அன்புமணிக்கு பள்ளிக் கல்வி, சுற்றுச்சூழல், வனம் ஆகிய 3 துறைகளில் ஏதேனும் ஒரு துறை வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, த.வெ.க. அமைச்சரவையில் காங்கிரஸ் (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (1), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1) ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments