ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொண்டி அருகே அமைந்துள்ள அருள்மிகு விஸ்வநாதயேந்தல் ஸ்ரீ நவசக்தி வாராஹி அம்மன் ஆலயத்தில் "மஹா வாராஹி யாகம்" பெருந்திரளான பக்தர்கள் சூழ மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இப்புனித யாகப் பெருவிழா, வேலூர் ஸ்ரீஸ்தலம் ஸ்ரீ வாராஹி சேஷரத்தின பீடாதிபதி யாகரிஷி ஸ்ரீ வராஹ குருஜி அவர்களின் புனிதக்கரங்களால் தலைமையில் முன்னின்று நடத்தப்பெற்றது. விழாவின் தொடக்கமாக, இடையூறுகள் இன்றி காரியங்கள் சித்தியடைய கணபதி ஹோமமும், அதனைத் தொடர்ந்து பல்வேறு மங்கல யாகங்களும் கணபதி வழிபாட்டுடன் தொடங்கின.
யாக குண்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அபூர்வ நறுமணத் திரவியங்கள், மூலிகைகள், நவதானியங்கள் மற்றும் மலர்கள் சமர்ப்பிக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வேள்வி நடைபெற்றது. யாகத்தின் சிகர நிகழ்வாக, ஸ்ரீ நவசக்தி வாராஹி அம்மனுக்குப் பட்டுப் புடவை சாற்றப்பட்டு, யாக குண்டத்தில் பட்டுப் புடவை மற்றும் பூர்ணாஹுதிப் பொருட்கள் இடப்பட்டு மஹா பூர்ணாஹுதி கோலாகலமாக நிறைவேறியது.
இச்சிறப்பு யாக நிகழ்வில் தொண்டி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், மெய்யன்பர்கள் வருகை தந்து ஸ்ரீ நவசக்தி வாராஹி அம்மனின் அருள்மிகு தோற்றத்தைக் கண்டு தரிசனம் செய்தனர். மேலும், வருகை தந்திருந்த பக்தர்கள் அனைவரும் யாகரிஷி ஸ்ரீ வராஹ குருஜி அவர்களிடம் நேரில் ஆசி பெற்றனர்.
விழாவின் நிறைவாக, கோவில் நிர்வாகத்தின் சார்பில் வந்திருந்த அனைத்துப் பக்த கோடிகளுக்கும் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆலைய நிர்வாகத்தினரும் ஊர் பொதுமக்களும் இணைந்து மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.





0 Comments