நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் வியாழக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
வேதாரண்யம் பசுமடம் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நஞ்சை உபரி நிலங்களை, நிலமற்ற ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நீண்ட காலமாக நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக, கீழையூர் ஊராட்சியில் 181 பேருக்கும், காரப்பிடாகை ஊராட்சியில் 36 பேருக்கும் தலா 50 சென்ட் நிலம் வழங்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு, பட்டா வழங்கப்பட்டது.
இதையடுத்து, அரசு வழங்கிய நிலத்துக்கான தொகையை பயனாளிகள் இரு தவணைகளாக அரசுக்கு செலுத்தியுள்ளனர். கீழையூர் ஊராட்சியில் 12 பயனாளிகளுக்கு தலா 50 சென்ட் நிலம் அரசு சார்பில் அளவீடு செய்யப்பட்டு, அவர்களிடம் நிலம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த 12 பயனாளிகளும் நிலத்தில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மீதமுள்ள 169 பயனாளிகளுக்கும் அரசு வழங்கிய நிலத்தை அளவீடு செய்து ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகக் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பு ராமலிங்கம், தலைமை நில அளவையர் முருகானந்தம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாகை மாலி, மாரிமுத்து, விவசாய சங்க மாநில துணைத் தலைவர் சுப்ரமணியன், கீழையூர் மேற்கு ஒன்றியச் செயலர் வெங்கட்ராமன், ஆலய நிலங்கள் எடுப்பு வட்டாட்சியர் ஜெயபாலன், வேதாரண்யம் துணைக் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை, கீழ்வேளூர் வட்டாட்சியர் வேதையன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அரசு வழங்கிய நிலங்களை முறையாக அளவீடு செய்து, சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் விரைவில் ஒப்படைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைவிட்டனர்.
திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்




0 Comments