இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வரும் செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பல்வேறு கோவில் திருவிழாக்கள் நடைபெற உள்ள நிலையில், அந்த நாட்களில் மின்தடை செய்யப்படும் பட்சத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும் என கூறப்படுகிறது. எனவே, திட்டமிடப்பட்டுள்ள மின்தடை தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது. முதுகுளத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பூஜைகள், சுவாமி ஊர்வலங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம் மேலும் இரவு நேரங்களில் சுவாமி ஊர்வலம், கலைநிகழ்ச்சிகள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும், இதற்காக மின்சாரம் அத்தியாவசியமாக இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், அந்த நாட்களில் திட்டமிட்டபடி மின்தடை ஏற்படுத்தப்பட்டால் கோவில் விழா ஏற்பாடுகள் மட்டுமின்றி, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும் என கூறப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் மின்தடை காரணமாக பாதுகாப்பு தொடர்பான சிரமங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் கோவில் திருவிழாக்களை கருத்தில் கொண்டு, அன்றைய தினங்களில் மேற்கொள்ளப்பட உள்ள மின்தடை பணிகளை வேறு தேதிக்கு மாற்றி அமைக்க வேண்டும் என்றும், திருவிழா நடைபெறும் பகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவிழா நாட்களில் மின்சார விநியோகத்தில் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுத்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 Comments