நாகை.வேளாங்கண்ணி அருகே நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

 


வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியின் 2026-2027-ஆம் கல்வியாண்டுக்கான நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் நடைபெறும் 7 நாள் சிறப்பு முகாம் பிரதாபராமபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்று வருகிறது.

முகாமில் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 25 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்று தூய்மை பணி, உழவார  பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களிடையே சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை, பொதுமக்கள் நலன் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை வளர்க்கும் வகையில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வின் 

தொடக்க விழாவில் நாகப்பட்டினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா. இரவிச்சந்திரன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

மேலும், புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பி.அந்தோணி அல்போன்ஸ், முதுகலை வரலாற்று ஆசிரியர் எக்ஸ்.ஏ. நத்தானியல், உதவி தலைமை ஆசிரியர் எம்.ரெக்ஸ் அலெக்சாண்டர், வேளாங்கண்ணி ரோட்டரி சங்கத் தலைவர் ஜி. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்திப் பேசினர்.

இதைத்தொடர்ந்து, முகாமின் தொடக்க நிகழ்வாக மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதில் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.

7 நாள்கள் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் மாணவர்கள் பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை மற்றும் சுகாதாரம், மரம் வளர்ப்பு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் மாணவர்கள் ஈடுபட உள்ளனர்.

மேலும், சமூக சேவையின் முக்கியத்துவத்தை மாணவர்கள் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதன் மூலம் மாணவர்களிடையே சேவை மனப்பான்மை, தலைமைப் பண்பு, ஒற்றுமை மற்றும் சமூக அக்கறையை வளர்ப்பதே முகாமின் முக்கிய நோக்கமாகும்.

முகாமுக்கான ஏற்பாடுகளை புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஏ. ஆல்பர்ட் செய்திருந்தார்.

 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments