கமுதி பகுதியில் தீவிரமடையும் நெல் சாகுபடி: துளிர்க்கும் பயிர்கள்



ராமநாதபுரம் மாவட்டம் கமுதி  சுற்று வட்டார பகுதிகளில் நடப்பு பருவத்திற்கான நெல் சாகுபடிப் பணிகள் முழு வீச்சில்விறுவிறு படைந்துள்ளன. மானாவாரி மற்றும் பாசன நிலங்களில் விதைக்கப்பட்ட நெல் மணிகள் தற்போது துளிர்த்து முளைவிடத் தொடங்கியுள்ளதுடன் ஆங்காங்கே நாற்று நடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

கமுதி புறநகர் கிராமங்களில் விவசாயிகள் கோடை உழவு முடித்து, பருவத்திற்கு ஏற்றவாறு நேரடி விதைப்பு பணிகளை மேற்கொண்டனர். தற்போது நிலத்தில் விதைக்கப்பட்ட நெல் விதைகள் சீராக முளைத்து, இளம் பயிர்களாகத் தளிர்விடத் தொடங்கியுள்ளன. விளைநிலங்கள் மெல்லப் பசுமைப் போர்வை போர்த்தியது போல் காட்சியளிப்பது விவசாயிகளின் கண்களுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விறுவிறுப்படையும் நடவுப் பணிகள் நேரடி நெல் விதைப்பு ஒருபுறம் நடைபெற, நாற்றுப் பாவிய நிலங்களில் இருந்து நாற்றுகளைப் பறித்து வயல்களில் நடும் பணிகளும் ஆங்காங்கே மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் வயல்களில் இறங்கி நடவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பருவமழை கைகொடுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு பெரும்பாலும் பருவமழையை நம்பியே விவசாயம் நடைபெறும் இப்பகுதியில், தற்போது துளிர்த்துள்ள இளம் பயிர்களும், நடவு செய்யப்பட்டுள்ள நாற்றுகளும் செழித்து வளரத் தொடர்ச்சியான மழைப்பொழிவு அவசியமாகிறது.

பயிர்கள் நன்கு முளைத்து வரத் தொடங்கியுள்ளன; நடவுப் பணிகளும் தொடர்ந்து நடக்கின்றன. இனிவரும் நாட்களில் பருவமழை தாராளமாகப் பெய்து கண்மாய், குளங்கள் நிறைந்தால் மட்டுமே பயிர்கள் செழித்து நல்ல மகசூலைத் தரும். இந்த பருவம் விவசாயிகளுக்கு நல்ல லாபத்தையும் நற்பலனையும் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments