நாகை: திருக்குவளை காவல் நிலையம் சார்பில் சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி



நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை காவல் நிலையம் சார்பில், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து பங்கேற்ற சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி திருக்குவளை கடைத்தெருவில் நடைபெற்றது.

திருக்குவளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் இரா. சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியில் பங்கேற்ற காவலர்கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்களுக்கு சைபர் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினர்.

குறிப்பாக, அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை நம்பி தனிப்பட்ட தகவல்கள், வங்கி கணக்கு விவரங்கள், ஏடிஎம் அட்டை மற்றும் ஓடிபி உள்ளிட்ட ரகசிய தகவல்களை தெரிவிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. மேலும், தெரியாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் சந்தேகத்திற்குரிய இணையதள இணைப்புகளை (லிங்க்) திறக்காமல் பாதுகாப்பாக கையாள வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு, முதலீடு, பரிசு, கடன் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் நடைபெறும் மோசடிகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சைபர் மோசடியில் பணம் இழப்பு ஏற்பட்டால் உடனடியாக 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தலைமை காவலர்கள் சதீஸ்குமார், வினோத், தனிப்பிரிவு தலைமை காவலர் கணேஷ்குமார், ஊர் காவல் படை காவலர் மூர்த்தி மற்றும் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 திருக்குவளை செய்தியாளர் த. கண்ணன்

Post a Comment

0 Comments