திருக்குவளை அருகே நாட்டு நலப்பணித்திட்ட ஏழு நாள் சிறப்பு முகாம் நிறைவு



திருக்குவளை தாலுக்கா  வலிவலம் தேசிகர் மேல்நிலைப்பள்ளி சார்பில் நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்டத்தின் ஏழு நாள் சிறப்பு முகாம் நிறைவு விழா நடைபெற்றது.

பள்ளியின் ஆட்சிமன்றக் குழுத் தலைவர் ஏ. மனஅழகன் ,பள்ளிச் செயலர் ஸ்ரீதேவி மனஅழகன் ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) எஸ். குமார் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வீ. மார்சல் வரவேற்றார்.



“எனக்காக அல்ல, உனக்காக” என்ற நோக்கத்துடனும், போதைப் பழக்கம் மற்றும் காசநோய் இல்லாத இளைஞர்களை உருவாக்கும் வகையிலும் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில், பள்ளியைச் சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கொடியாலத்தூர் ஊராட்சியில் முகாமிட்டு பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டனர்.முகாமின் ஒரு பகுதியாக ஊராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள், உழவாரப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாணவர்கள் தன்னார்வத்துடன் மேற்கொண்டனர். மேலும், பொதுமக்களிடையே சமூக நலன் மற்றும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.


நிறைவு விழாவில் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் டி.வி. புரட்சிதாசன் கலந்து கொண்டு, ஏழு நாட்களாக மாணவர்கள் மேற்கொண்ட சமூகப் பணிகளைப் பாராட்டிப் பேசினார். நாட்டு நலப்பணித்திட்டத்தில் தன்னார்வலர்களாக இணைந்து பணியாற்றுவதன் மூலம் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய பலன்கள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.மாணவர்களின் தன்னார்வப் பணியைப் பாராட்டும் வகையில் வலிவலம் மற்றும் கொடியாலத்தூர் வர்த்தகர் நலச் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில் வர்த்தகர் நலச் சங்கத் தலைவர் ஏ.வி. ஷாகுல், பொருளாளர் எஸ்.எம்.கே. சுரேஷ், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கங்காதரன், பிரபாகரன்,உறுப்பினர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களைப் பாராட்டினர்.நாட்டு நலப்பணித்திட்ட முகாமில் பங்கேற்ற மாணவர்களின் சமூக அக்கறை மற்றும் தன்னார்வப் பணியைப் பாராட்டி, ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நாட்டு நலப்பணித்திட்ட சேவையில் ஈடுபட்டு வரும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், வலிவலம் மற்றும் கொடியாலத்தூர் வர்த்தகர் நலச் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ஊக்கப் பரிசுகள் மற்றும் பல்வேறு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments