நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில கள்ள சாராயம், மது பாட்டில்கள் விற்பனை கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வந்தது. இதனால் கிராம பகுதிகளில் சாராய விற்பனை படுஜோராக நடந்து வந்தது.
இதனை கண்காணித்து, தடுக்க மாவட்டத்தில் 9 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாகை மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் கென்னடி தலைமையில் போலீசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாகை பெருங்கடம்பனூர் அருகே வளப்பாறு பாலத்தில் புதுச்சேரி மாநில சாராய மூட்டைகளுடன் 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை வழிமறித்தனர். போலீசாரை கண்டதும் சாராய மூட்டைகளுடன் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள ஆற்றில் குறித்து தப்பிவிட்டனர். அவர்களை பிடிப்பதற்காக பின்தொடர்ந்து ஆற்றில் குறித்து நீந்தி சென்ற போலீசாரால், அந்த மர்ம நபர்களை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து மோட்டார் சைக்கிளுடன் ரூ. 2 லட்சம் மதிப்பிலான சாராய மூட்டைகளை பறிமுதல் செய்து நாகை மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது தொடர்ந்து சுமார் 1000 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை காவல் கண்காணிப்பாளர் ஜவகர் முன்னிலையில் போலீசார் தரையில் கொட்டி அழித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;
பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலிருந்து சாரய கடத்தல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது கடந்த ( ஜனவரி 1 முதல் மார்ச்.21 வரை ) 687 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,717 குற்றவாளிகளை கைது செய்து,48875 லிட்டர் பாண்டி சாராயம்மற்றும், 6035 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு, கடத்தலில் பயன்படுத்தப்பட்ட 106 இரண்டு சக்கர வாகனங்கள்,3 மூன்று சக்கர வாகனங்கள் 5 நான்கு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் தொடர் மது குற்றங்களில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் மீது மதுவிலக்கு தடுப்பு காவல் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்ற மதுக்கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும், குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment