தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)ன் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முஹம்மது மீரான் வெளியிட்டுள்ள அறிக்கையில்:ஏழை, எளிய மாணவர்களுக்கான RTE எனப்படும் இலவச கட்டாய கல்வி திட்டத்தை 2010 ஏப்ரல் முதல் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் நோக்கம், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி படிக்க முடியாத தகுதியுள்ள ஏழை, எளிய மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே முழுவதும் ஏற்பதோடு, அவர்களுக்கு 25% இடங்களை தனியார் பள்ளிகள் ஒதுக்க வேண்டும் என்பதுதான்.மேலும் இந்த திட்டத்திற்காக தமிழக அரசு வருடம்தோறும் *ரூ.300 கோடிக்கு* மேல் செலவு செய்கிறது.
ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக RTE-யின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கின்றன. இது குறித்து பெற்றோர்கள், பொதுமக்கள் தனியார் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினால் அதற்கு முறையான பதில் தராமல் அலைகழிக்கிறார்கள். சில பள்ளி நிர்வாகம் கட்டணம் வசூலிப்பதற்கான பல்வேறு பொருந்தாக் காரணங்களையும் கூறுகிறார்கள்.
கல்வி என்பது ஒவ்வொரு தனி மனிதனின் அடிப்படை உரிமை அந்த கல்வி சமூகத்தின் அனைத்து தரப்பினர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அரசின் உயர்ந்த இந்த நோக்கத்தை பாழ்படுத்தும் விதமாக தனியார் பள்ளிகள் செயல்படுவது வேதனையளிக்கிறது.
மேலும் தனியார் பள்ளிகளின் இத்தகைய செயல்பாட்டால் ஏழை, எளிய மாணவர்களுக்கு அரசு வழங்கும் கட்டாய இலவச கல்வி கூட எட்டாக்கனியாகி விடுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது.
எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதில் உரிய கவனம் செலுத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையின் மூலமாக RTE திட்டத்தின் கீழ் பயிலும் ஏழை, எளிய மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என்பதை அறிவுறுத்துமாறும்.
அப்படி மீறி கட்டணம் வசூலிக்கக்கூடிய தனியார் பள்ளிகளுடைய உரிமத்தை ரத்து செய்வதோடு, தமிழக அரசின் இந்த உயரிய திட்டத்தை உயிரோட்டமாக்கி,
ஏழை, எளிய மாணவர்களின் இலவச கல்வி கனவையும் நிறைவேற்றித் தருமாறு பொதுநலன் கருதி கேட்டுக் கொள்கின்றேன்.என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment