நீதிமன்ற உத்தரவை மதிக்க தவறிய அறநிலையத்துறை அதிகாரிகள்,அரசியல்வாதிகள் - MAKKAL NERAM

Breaking

Tuesday, April 4, 2023

நீதிமன்ற உத்தரவை மதிக்க தவறிய அறநிலையத்துறை அதிகாரிகள்,அரசியல்வாதிகள்


தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் பங்குனி உத்திர  தேரோட்டம்  நடைபெற்றது. முன்னதாக தேரோட்டத்தை பெரியகுளம் பகுதியை சார்ந்த முக்கிய பிரமுகர் பெரியகுளம் நகர் மன்ற தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் ஊர் பொதுமக்கள் திருத்தேரினை  வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர் .துவக்க நிகழ்வின் போது இந்து சமய அறநிலைத்துறை மூலம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த பிரமுகருக்கு பரிவட்டம் கட்டினர். கோவில் திருவிழாக்களில் எவருக்கும் பரிவட்டம் கட்டக்கூடாது என்று கடந்த  ஜனவரி,13 ம்  தேதி  உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டிருந்தார். மேலும், கோவிலினுள்   யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ ,தலைப்பாகை ,குடை பிடிப்பது அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களிலோ ஈடுபடக்கூடாது ,அனைத்து பக்தர்களும் கிராம மக்களும் சமமாகவும் சம மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும்.  கோவிலுக்குள் அனைவரும் சமமானவர்களே எனவும் சிறப்பு மரியாதை வழங்குமாறு வற்புறுத்தவும் கூடாது என  அந்த உத்தரவுகளில் தெளிவாக குறிப்பிட்டு இருந்தது . இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின்  தீர்ப்பை அவமதிக்கும் வகையில் பெரியகுளம் பகுதியில் முக்கிய பிரமுகர் ஒருவருக்கு பரிவட்டம் கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து செயல் அலுவலர் ராம திலகம்  அவர்களிடம் கேட்டபோது : " எல்லாம் முறைப்படி தான் நடக்கிறது" என்று அழுத்தமாக தெரிவித்தார். பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த அனைத்து சமூக, சமுதாய மக்களும் கலந்து கொண்டு வழிபட்டு வரும் இந்த தேரோட்டத்தினை ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்து நடைபெறும் தேரோட்டமாக காணப்பட்டது என பொதுமக்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.தமிழகத்தில் அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராகலாம் என்று சமூக நீதிப் பேசும் திராவிட மாடலா ஆட்சியில் தொடர்ந்து பெரிய குளத்தில் உள்ள கோவில்களில் இப்படி நடைபெற்று வருவது வேதனைக்குள்ளாக உள்ளது.ஆகவே இது குறித்து தமிழக அரசும் இந்து அறநிலையத்துறை ஆணையாளரும் பெரிய குளத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான கோவில்களில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பின்பற்றப்படும் நடைமுறைகள்,கோவிலில் உள்ள தங்கம் வெள்ளி பித்தளை பொருட்களின் எண்ணிக்கைகள் குறித்தும் சிலைகள் குறித்தும் கணக்கெடுப்பு செய்ய வேண்டும்,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெற வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியகுளம்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment