மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள், டோக்கன்கள் நாளை முதல் விநியோகம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, July 19, 2023

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள், டோக்கன்கள் நாளை முதல் விநியோகம்

 


தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15- ஆம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்குவதற்காக ஜூலை 20-ம் தேதி முதல் வீடு வீடாக டோக்கன், விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், கலைஞர், மகளிர் உரிமைத்தொகைக்கான டோக்கன்கள், விண்ணப்ப விநியோகம் நாளை முதல் தொடங்க உள்ளது. வீடு வீடாக விண்ணப்பங்கள், டோக்கன்கள் பணி நாளை முதல் தொடங்குகிறது. யார் எந்த நாளில் முகாமில் பங்கேற்பது உள்ளிட்ட விவரங்கள் படிவத்தில் இருக்கும் என்றும் முகாம் நடக்கும் இடம் குறித்து நியாய விலை கடைகளில் தமிழில் பலகை வைக்கப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்தார். 2023-24-ம் நிதியாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்திட ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை முதல் வீடு வீடாக சென்று டோக்கன் மற்றும் விண்ணப்பம் விநியோகம் செய்யும் பணி தொடங்குகிறது.


இந்தத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் அரசால் அச்சடிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து அவை ரேஷன் கடை பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பயனர்கள் விண்ணப்பபதிவு முகாம்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் பதிவு முகாம் காலை 9.30 முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் மாலை5.30 மணி வரையும் நடத்தப்படும் என வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.


இதனிடையே, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவுக்கான முதற்கட்ட முகாம் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறும் என்றும் ஆகஸ்ட் 5 முதல் 16ம் தேதி வரை முதற்கட்ட முகாம் நடைபெறும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment