திருச்சி மத்திய பேருந்து நிலைய இலவச சிறுநீர் கழிப்பிடத்தை ஒரே ஒரு முறை மேயரும்,ஆணையரும் பயன்படுத்த வேண்டும் - பயணிகள் கோரிக்கை - MAKKAL NERAM

Breaking

Sunday, October 29, 2023

திருச்சி மத்திய பேருந்து நிலைய இலவச சிறுநீர் கழிப்பிடத்தை ஒரே ஒரு முறை மேயரும்,ஆணையரும் பயன்படுத்த வேண்டும் - பயணிகள் கோரிக்கை


தமிழகத்தின் மையப்பகுதியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு முக்கிய போக்குவரத்து வழித்தடமாக திருச்சி உள்ளது. வெளியூரில் தங்கி பணியாற்றும் பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும்போது, திருச்சிக்கு வந்தே அடுத்த பேருந்து மாறி சென்று வருகிறார்கள். திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்புடன் காணப்படும்.திருச்சியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையம் பழமையான பேருந்து நிலையமாகும். இங்கிருந்து சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல், நெல்லை, திருப்பூர், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன. மேலும், இங்கிருந்து நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் திருச்சிக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய பேருந்து நிலையத்தில் நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருகிறது. குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகள் கூட்டம் இருமடங்கு அதிகரிக்கிறது.




இதன் காரணமாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் போதுமான இடவசதி இல்லாததாலேயே திருச்சி மக்களின் 25 ஆண்டு கால கனவுத்திட்டமான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணி பஞ்சப்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். அங்குள்ள கழிப்பிடத்தில் துர்நாற்றம் வீசுகிறது. மழை பெய்தால் பேருந்து நிலையத்துக்குள் உள்ள சாலைகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. பள்ளமான இடங்களில் மழைநீரும் தேங்கி கிடக்கிறது. இலவச சிறுநீர் கழிப்பிடத்தில் சிறுநீர் வெளியே செல்லாமல் அதே இடத்தில் தேங்கி நிற்பதாலும் தூர் நாற்றம் வீசுவதாலும் பயணிகள் முகம் சுளிக்கின்றனர். இது குறித்து பயணிகள் கூறுகையில் தினமும் நான்கு முறையாவது இலவச சிறுநீர் கழிப்பறையை சுத்தம் வேண்டும் எனவும், திருச்சி மாநகராட்சி மேயரும்,ஆணையரும் ஒரே ஒரு முறை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள இலவச சிறுநீர் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தனர்.

No comments:

Post a Comment